ராகுல் பள்ளி விடுமுறையில் தஞ்சாவூரில் இருக்கும் தன் தாத்தாவின் வீட்டிற்கு பெற்றோருடன் சென்றான்.
அவன் அங்கு சென்றால் மிதிவண்டியில் கிராமத்தைச் சுற்றி வருவது அவனுடைய பொழுதுபோக்குகளில் ஒன்று.
அன்றும் அவன் தன் தாத்தாவிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.
சாலையின் இரண்டு ஓரங்களிலும் மரங்களின் கிளைகள் சாலைக்கு பந்தல் போட்டதுபோல் இருக்கும். அந்த மரங்கள் தரும் நிழலில் உல்லாசமாக அவன் சுற்றி வருவான்.
அன்றும் அதுபோல் நினைத்து மிதிவண்டியில் கிளம்பினான் ராகுல்.
ஆனால், அவன் நினைத்ததுபோல் இல்லாமல் வெயில் சுட்டெரித்தது. அந்த சூட்டைத் தாங்க முடியாமல் மரத்தின் நிழலில் ஒதுங்கலாம் என்று பார்த்தால் அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
காரணம் இரண்டு பக்கங்களில் அடர்ந்து தன்னுடைய கிளைகளால் பந்தல் போட்டு இருந்த மரங்களைக் காணவில்லை. அதனால் அந்த கிராமமே சூடாகிப் போனதை உணர்ந்தான்.
விரைந்து வீட்டை அடைந்த ராகுல் தாத்தாவைப் பார்க்கச் சென்றான். தாத்தா கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தாத்தா, சாலைகளில் இருந்த மரங்கள் என்ன ஆனது தாத்தா? வெயில் தாங்க முடியவில்லையே,” என்று கேட்டான்.
அதற்கு தாத்தா, “புயல் அடித்தபோது அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன ராகுல். நல்லவேளையாக நம் வீட்டின் பின்னால் இருக்கும் அரச மரம் மட்டும் வேரோடு சாயவில்லை. நான் அதன் கிளைகளை அவ்வப்போது ஆள்களை வைத்து வெட்டி பாதுகாத்து வந்தேன். அதனால் அந்த மரம் மட்டும் புயலில் சாயவில்லை. வா. அந்த மரத்தின் நிழலில் அமர்வோம்,” என்று கூறி ராகுலை அழைத்துச் சென்றார்.
மரத்தின் நிழலில் அமர்ந்ததும் ராகுலுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது. “தாத்தா, நான் இருக்கும் இந்த முப்பது நாள்களில் தினமும் என்னால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட ஆசைப்படுகிறேன். அதற்கு எனக்கு உதவுவீர்களா தாத்தா?” என்று கேட்டான்.
தாத்தாவும் மகிழ்ச்சியுடன், “கட்டாயம் செய்கிறேன். நானும் வந்து உதவுகிறேன்,” என்று கூறியதுடன் நிறைய மரக்கன்றுகளை வாங்கிக் கொடுத்தார்.
மறுநாள் தாத்தாவும் பேரனும் சாலை ஓரங்களில் குழி தோண்டி, மரக்கன்றுகளை நடத் தொடங்கினார்கள்.
காலை எழுந்ததும் அதற்கு தண்ணீர் ஊற்றி வாடாமல் பார்த்துக்கொண்டான் ராகுல். அதைப் பார்த்த அந்தக் கிராமத்து மக்களும் வெளியூரில் இருந்து வந்த சிறுவன் செய்த செயலைப் பாராட்டி அவர்களும் சாலைகளில் மரக்கன்றுகளை நடத் தொடங்கினார்கள்.
மூன்று ஆண்டுகள் கழித்து விடுமுறைக்குச் சென்ற ராகுல், சாலையின் இரு பக்கங்களிலும் பசுமை கூத்தாடுவதைப் பார்த்தான். அந்த மரங்கள் காற்றில் அசைந்து ராகுலை வரவேற்பதுபோல் கிளைகளை ஆட்டி வரவேற்றன. கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீருடன் தாத்தாவைப் பார்க்கச் சென்றான் ராகுல்.
இன்று நாம் நடும் ஒரு மரம், நாளை நமக்கும் மற்றவருக்கும் நிழலும் நல்ல காற்றையும் தரும். ராகுல்போல நாமும் ஒரு மரம் நடுவதில் தொடங்கி, இயற்கையைப் பாதுகாப்போம். ஒரு சிறியசெயல், ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்!

