இதயம் ஏன் மிகவும் முக்கியம்?
இதயத்தை உங்கள் உடலின் மிகவும் சக்திவாய்ந்த ‘பம்பிங் எஞ்சின்’ என்று சொல்லலாம். இது ஒருபோதும் சோர்வடையாமல் வேலை செய்யும் ஒரு தசை.
இரத்தத்தை அனுப்புகிறது: ஒரு தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதுபோல, உங்கள் இதயம் இரத்தத்தை ‘பம்ப்’ செய்து உடல் முழுவதும் அனுப்புகிறது.
சக்தி கொடுக்கிறது: இந்த இரத்தம்தான் நீங்கள் ஓட, குதிக்க, சிரிக்க, படிக்கத் தேவையான சக்தியை (உயிர் ஆக்ஸிஜனை) உங்கள் கைகள், கால்கள், மூளைக்குக் கொண்டு செல்கிறது.
ஓய்வே இல்லை: நீங்கள் தூங்கும்போதுகூட, உங்கள் இதயம் துடித்துக்கொண்டேதான் இருக்கும். அது நின்றுவிட்டால், உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.
உங்களின் நண்பன்: உங்கள் உடலில் உள்ள பாகங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தாலும் அன்றாடம் ஓய்வு எடுக்காமல் 24 மணி நேரமும் உங்களுக்காக துடிக்கும் உங்கள் இதயம் என்ற நண்பனுக்காக நீங்கள் இந்த எளிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவீர்களா?
உங்கள் இதயத்தைப் பாதுகாக்க 4 எளிய வழிகள்:
உங்கள் இதயத்தை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய 4 முக்கியமான நடவடிக்கைகள் இங்கே:
தொடர்புடைய செய்திகள்
1. ஓடி ஆடி விளையாடுங்கள்!
திரை நேரத்தைக் குறைத்து தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடி ஆடி விளையாடுங்கள்.
ஓடுதல், குதித்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுகள் உங்கள் இதயத்தை மிகவும் வலிமையாக்கும். இதயத் துடிப்பு வேகமாகும்போது, இதயம் ஒரு பயிற்சி செய்ததுபோல பலம் பெறும்.
2. சத்தான உணவுகளை உண்ணுங்கள்!
உங்கள் இதயத்திற்குத் தேவையான சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கீரைகள் போன்ற நிறமுள்ள உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற அதிக உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ள உணவுகளைக் குறைவாக உண்ணுங்கள்.
3. நன்றாகத் தூங்குங்கள்!
சரியான நேரத்தில் படுத்து, சரியான நேரம் எழுவது இதயத்திற்கு நல்லது.
நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் இதயம் மெதுவாக இயங்கும். போதுமான ஓய்வு கிடைத்தால், அது அடுத்த நாள் வேலை செய்யத் தயாராகிவிடும்.
4. மகிழ்ச்சியாக இருங்கள்!
சண்டையிடுவதைக் குறைத்து, எல்லோருடனும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் இதயம் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் துடிக்கும். பயம் அல்லது அதிகக் கோபம் இதயத்துக்குச் சுமையைத் தரும்.
உங்கள் மார்பினில் கைவைத்து இதயத் துடிப்பை உணர்ந்து, அதனிடம், “நண்பா! எனக்காக உழைக்கும் உன்னைத் துன்புறுத்தாமல் உன்னை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பேன்,” என்று உறுதிமொழி எடுங்கள் சிறுவர்களே!