ஒருநாள் ஆசிரியர், வகுப்பில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மாணவர்களிடம் ‘பிரச்சினை வந்தால் தன்னம்பிக்கையுடன் எப்படிச் செயல்படவேண்டும்,’ என்பதை உணர்த்துவதற்காக ஓர் எறும்பின் கதையைக் கூறத் தொடங்கினார்.
“ஓர் எறும்பு தன் வாயில் உணவுப் பொருளைத் தூக்கிக்கொண்டு தன் பொந்தைத் தேடிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு பள்ளம் இருந்தது.
“அதனால் அந்த எறும்பு அதைத் தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, மனம் தளராத அந்த எறும்பு, தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது.
“எறும்பைப்போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்.
“மேலும் அந்தச் சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்தத் தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும். மலைபோல் வந்த துன்பம் பனிபோல் விலகும்,” என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.
எறும்பு சிறியதாக இருந்தாலும் பள்ளத்தைத் தாண்ட முடியாது என்றபோது மனம் தளராமல் அமைதியாக யோசித்து அதற்கு ஒரு தீர்வைக் கண்டது. நமக்கும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது நம்மால் முடியாது என்று மனம் தளராமல் யோசித்து அதற்குத் தீர்வு காணவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்.
ஜேஸ், தொடக்கநிலை 3, மெரிடியன் தொடக்கப்பள்ளி

