சிறுவர்களுக்காகப் புதிய நூலகப் பகுதிகள் ஜூரோங் வட்டார நூலகம், பீஷான் பொது நூலகம், பொங்கோல் வட்டார நூலகம் ஆகியவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளன!
சிங்கப்பூரில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க தேசிய நூலக வாரியத்தின் ‘கம்யூனிட்டி டேக்ஓவர்’ எனும் திட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) தொடங்கி வைக்கப்பட்டது.
நீங்கள், உங்கள் பெற்றோர், சகோதரர்கள், நண்பர்களுடன் இந்தப் பகுதிகளில் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை வாசித்து நேரத்தை இன்பமாகக் கழிக்கலாம். சிறுவர்களைப் புத்தகம் படிக்கத் தூண்டும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டுள்ளன.
ஜூரோங் வட்டார நூலகத்தில் இருக்கும் வாசிப்புப் பகுதியை ‘ஃபார்ட்டிடூ’ அறைகலன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இங்கு அமர்ந்து, மந்திரக் கதைகளைப் படித்தால் மந்திர உலகிற்குள் நீங்களும் அழைத்துச் செல்லப்படுவீர்கள்!
பீஷான் பொது நூலகத்தில் இருக்கும் வாசிப்புப் பகுதியை ‘கிளேம்ப்பிங் சொசைட்டி’ நிறுவனம் வடிவமைத்துள்ளது. மர்மக் கதைகளையும் திகில் கதைகளையும் விரும்புவோர், இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் அமர்ந்து புத்தகங்களைப் படிக்கலாம்.
பொங்கோல் வட்டார நூலகத்தில் இருக்கும் வாசிப்புப் பகுதியை ‘ஸ்கேன்டீக்’ அறைகலன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. விதவிதமான அறிவியல் புனைகதைகளை இந்தப் பகுதியில் அமர்ந்து நீங்கள் படித்து மகிழலாம்.
“சிறுவர்கள் வாசிப்பதை நேசிக்க வேண்டுமென்றால், அதற்கேற்ப அவர்களுக்குப் பிடித்த சூழலை அமைத்துகொடுக்க வேண்டும். இந்தப் புதிய வாசிப்புப் பகுதிகளில் அவர்கள் விரும்பி, தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று கூறினார் ‘ கிளேம்ப்பிங் சொசைட்டியின்’ இயக்குநர் கிறிஸ்டபெல் லீ, 32.
பீஷான் நூலகத்தில் புதிய வாசிப்பு இடம் மூன்று மாதங்களுக்கும் ஜூரோங், பொங்கோல் நூலகங்களில் ஆறு மாதங்களுக்கும் இடம்பெற்றிருக்கும். அதன் பிறகு அறைகலன்கள் அந்தந்த நிறுவனங்களிடம் திருப்பித் தரப்படும் என்பதால் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
நம்மால் போகமுடியாத இடத்திற்கெல்லாம் புத்தகங்கள் அவற்றின் சாளரத்தின் வழியே கூட்டிப்போகின்றன. மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும் இந்தப் புதிய வாசிப்பு பகுதிகளுக்குச் சென்று புதிய அனுபவத்தைப் பெறுங்கள்!