சிறுவர்களே! விடுமுறையெல்லாம் முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி இருப்பீர்கள். உங்களை யாராவது கிண்டல் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்தக் கதையில் என்ன நடந்தது என்று படித்து தெரிந்து கொள்ளலாமா?
ஓர் ஊரில் அழகான நீரோடை இருந்தது. அந்த ஊரே பச்சை பசேலென இருக்க, நீரோடையின் ஓரமாக பின்னி என்ற மரம் வளர்ந்து செழிப்பாக இருந்தது. பார்க்கவே பச்சை இலைகளுடன் கிளைகளைப் பரப்பி அழகாக காட்சியளித்தது.
அந்த வழியாகச் செல்லும் மக்கள் ஒரு முறையாவது பின்னியின் அருகில் நின்று ஓய்வெடுக்காமல் செல்ல மாட்டார்கள்.
அதன் அருகிலே சில்லி என்று மற்றொரு மரம் இருந்தது. அது பார்க்க கொஞ்சம் ஒல்லியாக, குட்டையாக இருந்தது.
மக்கள் எப்போதும் பின்னி மரத்தின் கீழ் நின்று இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். ஆனால், சில்லியின் நிழலில் ஒரு சில சிறுவர்கள் மட்டுமே நின்று விளையாடுவார்கள்.
அதற்காக சில்லி ஒருநாளும் வருத்தப்பட்டது இல்லை. ஆனால், பின்னி மக்கள் தன்னைத்தான் பெரிதாக பார்ப்பதால் பெருமையின் உச்சத்திற்கே சென்றது. அதுமட்டுமல்லாமல் சில்லியை வம்பிழுக்கவும் தொடங்கியது.
“நீ ஏன் இவ்வளவு குட்டையாக இருக்கிறாய்? நீ எவ்வளவு மெலிந்து இருக்கிறாய் என நீயே அந்த நீரோடையில் பாரு,” எனச் சொல்லி கேலி செய்தது.
பின்னி, சில்லியைக் கேலி செய்வதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் சில்லி மனமுடைந்து கதறி அழுதது.
அன்று திடீரென பலத்த புயல் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
பின்னி நான் மிகவும் உயரமானவன், உறுதியானவன். இந்தப் புயல்காற்றில் தப்பித்துவிடுவேன். ஆனால் உன்னுடைய நிலைமை மிகவும் பரிதாபம். நீ மிகவும் குட்டையாக இருக்கிறாய். உன்னால் இந்தப் புயலைத் தாங்க முடியுமா என்று தெரியவில்லை. உயிரோடு இருந்தால் நாளைப் பார்க்கலாம்,” என சத்தமாக சிரித்தது.
புயல் காற்று, சூறாவளியாக மாறியது. சில்லி பிழைப்போமா என்பது போல காற்றில் இங்கும் அங்கும் ஆடியது. ஆனால் பின்னி ஆடாமல் அசையாமல் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.
திடீரென மிகப் பலமாகப் புயல்காற்று வீசியதால் வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்ற பின்னி மரம் வேரோடு தரையில் சாய்ந்தது.
ஆனால், சில்லி அதே காற்றில் அங்கும் இங்கும் ஆடியது. மக்கள் யாருமே வெளியில் வராததால் இரவெல்லாம் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
காலையில் காற்று, மழை அடங்கியதும் வெளியில் வந்து பார்த்தால் பின்னி நீரோடையில் விழுந்து கிடந்தது.
பலரும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் தங்களின் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். அதைப் பார்த்த பின்னி, “என்னுடைய நிழலில் நின்று சென்றவர்கள் நான் வீழ்ந்து கிடக்கும்போது என்னைக் கவனிக்கவில்லையே!” என்று கண்ணீர்விட்டு அழுதது. தான் திமிருடன் மற்ற சிறு மரங்களைப் பார்த்து இகழ்ந்ததால் தனக்குக் கிடைத்த தண்டனை என்று வருந்தியது.
ஆனால், சில்லி வளைந்து கொடுத்து காற்றுக்கு ஏற்றாற்போல ஆடி, தன்னைக் காத்துக்கொண்டதைப் பார்த்து யாராக இருந்தாலும் பணிவன்பு அவசியம் என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டது பின்னி.
அமைதியாகவும் எந்தத் திசையில் காற்று அடித்தாலும் அதற்கு ஏற்றவாறு வளைந்து நெளிந்து அடக்கத்துடன் இருந்ததாலும் சில்லி உயிர் பிழைத்தது. ஆனால், பின்னியின் ஆணவமும் பிடிவாதமும் அதை வேரோடு சாய்க்க காரணமாயிற்று.
ஆகவே சிறுவர்களே! வளைந்து கொடுக்க வேண்டிய நேரங்களில் வளைந்து கொடுப்பது நமக்குப் பல நேரங்களில் நல்லதாக அமைய நிறையவே வாய்ப்பிருக்கிறது.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதை நமக்கு பின்னியும் சில்லியும் உணர்த்துவதைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.