நவம்பர் 24ஆம் தேதியன்று, சிங்கப்பூரின் குரு சித்தம் பெருங்குடில் எனும் ஜி.எஸ்.பி. வில்வித்தை அகாடமியின் 13 இளம் வீரர்கள், கண்களை மூடி வில்வித்தையில் அசாதாரண சாதனையை நிகழ்த்தினர்.
அதன்வழி, அவர்கள் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து, சிங்கப்பூர் வில்வித்தையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினர். “கண்களை மூடி வில்வித்தையில் ஈடுபட்ட ஆகப்பெரிய குழு” என்ற சாதனையை அவர்கள் படைத்தனர்.
இச்சாதனை சிங்கப்பூர் நீச்சல் மன்றத்தில் (Singapore Swimming Club) படைக்கப்பட்டது.
கண்களைமூடி வில்வித்தை என்பது வெறும் திறமை மட்டுமல்ல. அது ஓர் ஆழமான கலை. கண்கள் மூடப்பட்டிருக்கும்போது, மற்ற உணர்வுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன.
ஆழ்மன-தியான உத்திகளைப் பயன்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்தும்போது, இலக்கை நோக்கி முழு கவனத்தையும் செலுத்த முடியும். இந்த அபார திறனில் இளம் வயதிலேயே தேர்ச்சி பெற்றிருப்பது இந்த மாணவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
16-18 வயது பிரிவு (18 மீட்டர் தூரம்), 15 வயதுக்குக் கீழ் (10 மீட்டர் தூரம்) என்ற இரு பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒரு முக்கியமான மைல்கல்
இச்சாதனை, இந்தியாவின் பாரம்பரிய கலையான ஆழ்மன வில்வித்தையைச் சிங்கப்பூரில் மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. கடின உழைப்போடு ஆழ்மன-நுண்ணறிவையும் சேர்க்கும்போது எந்த உயரத்தையும் எட்டலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இளம் வயதிலேயே இத்தகைய சாதனையை நிகழ்த்திய இந்த மாணவர்கள், எதிர்காலத்தில் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை.


