சிறுவர்களின் கண்கள் வழியே உலகைக் காணும் கலைக் கண்காட்சி

1 mins read
67f745d1-ca7d-427d-8d6b-5523bd8f085b
கண்காட்சி விவரங்களைக் காட்டும் விளம்பர பதாகை. - படம்: சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம்

பத்து வயதுப் பிள்ளைகளின் கண்கள் வழியே உலக அம்சங்களை ஆராயும் தனித்துவமான கலைக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஒரே வானத்தின் கீழ் ஒரு சிந்தனை எனும் இச்சமகாலத் தொடக்கப்பள்ளி கண்காட்சி, நவம்பர் 21 2025 முதல் ஜனவரி 1, 2026 வரை நடைபெறவுள்ளது.

சிறு பிள்ளைகளின் விருப்பங்கள், சிந்தனைகள், வசிக்குமிடங்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக் குறித்த அவர்களது பார்வைகளைக் கதைகளாகப் பகிரும் வகையில் இந்தக் கண்காட்சி அமையும். பலவித சிந்தனைகளும், அனுபவங்களும் ஒன்றிணையும்போது உருவாகும் வடிவம் பார்வையாளர்களை ரசிக்கச் செய்யும். இயற்கை முதல் இல்லம் வரை பல்வேறு கருப்பொருள்களில் இந்தப் படைப்புகள் அமையவுள்ளன.

இது சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தின் கலை வழி கல்வி கற்கும் ஒரு திட்டமாகும்.

இதில், சிஎச்ஐஜே அவர் லேடி குவீன் ஆஃப் பீஸ், கேலாங் மெதடிஸ்ட் தொடக்கப்பள்ளி, ஹேக் பெண்கள் பள்ளி, மேஃபிளவர் தொடக்கப் பள்ளி, செயிண்ட் ஆண்டனிஸ் தொடக்கப் பள்ளி, ஸெங்ஹுவா தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.

காப்பிப் பொடி உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களைக் கொண்டு ஓவியங்கள், வரைபடங்கள், சிற்பங்கள் ஆகியவை மூலம் மாணவர்கள் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தவுள்ளனர்.

சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தில் (SAM at Tanjong Pagar Distripark) நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்