விளையாட்டுகளிலும் கலைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அங்கீகாரம் பெற்றனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவுக்கான பண நிதி (Straits Times Pocket Money Fund) பயனாளிகள் 60 பேருக்குக் கேப்பிடல் குழுமம் $1,500 ரொக்கத் திறன் விருதுகளை வழங்கியது. நிதியின் அறங்காவலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டேவிட் ஹோ அவ்விருதுகளைக் குழுமத்தின் சார்பில் வழங்கினார். ஃபோர்ட் கேனிங் பூங்காவில் விருது விழா நடைபெற்றது.
இம்மாணவர்கள் சாதாரணப் பள்ளிகளிலிருந்தும் சிறப்புக் கல்விப் பள்ளிகளிலிருந்தும் தொடக்கநிலை, உயர்நிலை, உயர்கல்விப் பிரிவுகளிலிருந்து வந்தனர். அவர்கள் தம் பள்ளிகளால் நியமனம் பெற்று, கேப்பிடல் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர்தான் சீஷான் தொடக்கப்பள்ளி மாணவி கேஷா உதயகுமரன், 12. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன் பள்ளியின் தரைப்பந்து (floorball) அணியில் விளையாடி வந்துள்ளார் கேஷா. வாரத்தில் இரண்டு நாள்கள் பயிற்சி செய்கிறார்.
அவர் தொடர்ந்து சிறந்து விளையாட இவ்விருது உந்துதலாக அமைகிறது.
சிங்கப்பூர் இளையர் தரைப்பந்து அகாடமியில் விளையாடியபோது தரைப்பந்தில் கேஷாவுக்கு நாட்டம் பிறந்தது. அவ்விளையாட்டில் மென்மேலும் முன்னேற அவர் உழைத்தார். பள்ளிகளுக்கிடையேயான தேசிய போட்டிகளில் நான்கு முறை வெற்றிகள் பெற்றுள்ளார். இரண்டுமுறைப் போட்டி நேர்மை மனப்பான்மைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
“என் இலட்சியம், எதிர்காலத்தில் தரைப்பந்து பயிற்றுவிப்பாளர் ஆகவேண்டும் என்பதே,” என்றார் கேஷா.
“அவர் கடுமையாக உழைத்துள்ளதால் அவருடைய பள்ளி அவரை இவ்விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது. இவ்விருது, தரைப்பந்து விளையாட்டுக்கான செலவுகளுக்கு - உபகரணங்கள், பயிற்சி உட்பட - பெரிதும் கைகொடுக்கும். உயர்நிலைப் பள்ளியிலும் அவர் தொடர்ந்து தரைப்பந்து விளையாட இவ்விருது உதவும்,” என்றார் கேஷாவின் தாயார் கலைவாணி உதயகுமரன்.
தொடர்புடைய செய்திகள்
கேஷாவின் போட்டிகளுக்கு அவர் தாயார் தவறாமல் உடன்சென்று ஊக்குவிப்பார். கேஷாவின் தந்தையும் வேலை அலுவல்களுக்கிடையே கிடைக்கும் நேரத்திலெல்லாம் சென்று ஊக்குவித்து வருகிறார்.
“கேஷா தன் தங்கைக்கு ஒரு முன்மாதிரி. தங்கைக்கு இந்திய நடனத்தில் ஆர்வம் உண்டு. அதனால் அவரும் முன்னேற ஊக்கம் பெறுவார் என நம்புகிறோம்,” என்றார் திருவாட்டி கலைவாணி.
கேஷா தன் தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வை முடித்துள்ளார். அச்சமயம் கல்விக்காகத் தரைப்பந்திலிருந்து இடைவேளை எடுத்திருந்தாலும் இனி மீண்டும் பயிற்சி செய்து அடுத்த நிலையை எட்ட விரும்புகிறார்.
இவ்விருதுகளைக் கேப்பிடல் குழுமம் மூன்றாம் ஆண்டாக வழங்குகிறது. இதற்கு முன் 2019லும் 2021லும் அது ஆண்டுக்கு 30 மாணவர்களுக்கு $1,000 ரொக்க விருதுகள் வழங்கியிருந்தது.
முந்தைய ஆண்டுகளில் இவ்விருதுகள் பெற்ற மூவர் இவ்வாண்டும் மீண்டும் பெற்றனர். 2016 முதல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கைச்செலவுக்கான பண நிதியை ஆதரித்துவந்துள்ள கேப்பிடல் குழுமம், இவ்வாண்டு எஸ்ஜி60க்காக குழுமத்தினுள்ளேயே நிதி திரட்டி, $300,000 நிதி அளித்துள்ளது.