ஓவியத்திற்கான சிறந்த செயற்கை நுண்ணறிவுத் தளங்கள்

2 mins read
8388419b-d6f1-4dc7-a584-fb9bf10ec116
செயற்கை நுண்ணறிவினால் மனித உழைப்பு, முயற்சியின்றி ஓவியங்கள் தயாரிக்கலாம். - படம்: ஊடகம்

நெ. ரெமிலா

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் முன்பு முடியாது என்று நினைத்த பலவற்றை நம்மால் இப்போது எளிதில் செய்துவிடமுடிகிறது. இப்போது, செயற்கை நுண்ணறிவினால் மிகுந்த மனித உழைப்புத் தேவையின்றி படங்களை வரையவும் உருவாக்கவும் முடிகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலம் ஓவியம் வரைவதற்கான சிறந்த ஐந்து தளங்களைப் பற்றி இங்கே அறிந்துகொள்வோம்.

‘டால்-இ 2’ (Dall-E 2)

இச்செயலி ஓவியங்களையும் படங்களையும் உருவாக்குவதோடு, ஏற்கெனவே இருக்கும் படங்களில் திருத்தங்களும் செய்கிறது. மிகவும் இயல்பாக படங்களைத் தயாரிப்பதே இதன் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

உள்ளீடு செய்யும் குறிப்புதவிச் சொல்லை (Prompt) மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு. பயன்படுத்துவதற்கு எளிதான இச்செயலியை குறிப்பிட்ட அளவில் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். முழு அனுபவத்தைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

‘ஸ்டாரி ஏஐ’ (Starry AI)

வெவ்வேறு விதமான பாணிகளில் ஓவியங்கள் வேண்டுமா? ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாணிகளிலிருந்து தேர்ந்தெடுத்து, உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்வரை படங்களை உருவாக்கிக்கொண்டேயிருக்கலாம். மேலும், இந்தச் செயலியிலுள்ள பல்வேறு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட ஓவியங்களை உங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வதற்கு உதவுகின்றன.

இச்செயலி முற்றிலும் இலவசமானது. ஒரு நாளுக்கு 25 படங்கள் வரை இலவசமாக உருவாக்கலாம். அதோடு நீங்கள் உருவாக்கும் படங்களுக்கான முழு உரிமையும் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. உயர்மதிப்புத் திட்டத்தைப் (Premium Plan) பயன்படுத்த குறைந்தது வாரத்திற்கு $1.99 கட்டணம் செலுத்தவேண்டும்.

‘நைட்கஃபே’ (Nightcafe)

செயற்கை நுண்ணறிவின் உதவியோடு சில நொடிகளில் அற்புதமான ஓவியங்களையும் படங்களையும் உருவாக்குவதோடு, ஓவியர்களுக்கான சிறந்த தளமாகவும் இது கருதப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு ஓவியப் போட்டிகளில் கலந்துகொள்ளுதல், ஓவியத்தில் ஆர்வம் காட்டும் மக்களோடு உரையாடுதல் போன்ற வாய்ப்புகளும் பயனர்களுக்குக் கிடைக்கிறது.

மேலும், சிறந்த ஓவியங்களைக் கண்டு ரசிப்பதோடு, அவற்றைத் தேர்ந்தெடுத்து, சக ஓவிய ஆர்வலர்களுக்கு ஊக்கமும் அளிக்கலாம்.

‘லைம்ஒயர் ஏஐ’ (Limewire AI Studios)

மற்றத் தளங்களைவிட இது சிறிது மாறுபட்டது. நீங்கள் உருவாக்கிய ஓவியங்களை இத்தளத்தில் வெளியிட்டால், உங்களது விளம்பர வருவாயில் 50% பங்கு உங்களுக்குக் கிடைக்கும்.

ஓவியத்தை உருவாக்கினால் மட்டும்தான் வருமானம் ஈட்டமுடியும் என்றில்லை. நீங்கள் ஓர் ஓவியரை இத்தளத்தில் பின்தொடர்பவராக இருந்தாலும், அல்லது அவர்களது படைப்புகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டாலும் உங்களுக்கு 10% விளம்பர வருவாய் கிடைக்கும்.

இத்தளத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவின்மூலம் இசையையும் காணொளிகளைம்கூட உருவாக்கலாம்.

‘டீப் டிரீம் ஜெனரேட்டர்’ (Deep Dream Generator)

பயன்படுத்துவதற்கு மிக எளிதான தளம் இது. இத்தளத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிவுசெய்ய வேண்டும் என்பதில்லை.

இத்தளம் முற்றிலும் இலவசமானது. முதல்முறையாக செயற்கை நுண்ணறிவின் மூலம் படங்கள் உருவாக்குகிறீர்கள் என்றால், இத்தளத்தைப் பயன்படுத்த நீங்கள் விரும்புவீர்கள்.

இந்த ஐந்து தளங்களுமே மிகவும் சுவாரசியமானவை. உங்களது ஓய்வு நேரத்திலோ அல்லது விடுமுறை நாள்களிலோ இவற்றை நீங்கள் பயன்படுத்தி மகிழலாம்.

குறிப்புச் சொற்கள்