சிறுவர்களின் கற்பனையைக் கவரும் ‘புத்தகப் பூச்சிகள்’ திட்டம்

3 mins read
13d5ad1f-767a-429b-a79e-5a1172263865
‘புத்தகப் பூச்சிகள்’ திட்டம்வழிப் பயனடைந்துள்ள சகோதரர்கள் கப்ஹில் டான் (இடம்), நிக்ஹில் டான். - படம்: ரவி சிங்காரம்

மாணவர்களே, உங்களில் எத்தனை பேருக்கு நூல் வாசிக்கப் பிடிக்கும்? அட்டை விளையாட்டுகளை விளையாடப் பிடிக்கும்?

நூல் படிப்பது அறிவு வளர்ச்சிக்கு முக்கியம்; விளையாட்டுகள் மனமகிழ்ச்சிக்கு முக்கியம். இவை இரண்டையும் இணைக்கும் விதமாக, தேசிய நூலக வாரியம் ‘புத்தகப் பூச்சிகள்’ எனும் திட்டத்தை 2016ல் தொடங்கியது.

இத்திட்டம்வழி, நேரடியாகவோ இணையவழியாகவோ இரவல் பெறும் ஒவ்வொரு நான்கு புத்தகங்களுக்கும் ஒரு ‘புத்தகப் பூச்சி’ அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

சிறுவர்கள் தம் அட்டைகளைப் பரிமாற்றிக்கொள்ளலாம். படத்தில், தன் அக்காவுடன் தாஜுதீன் (வலமிருந்து இரண்டாவது).
சிறுவர்கள் தம் அட்டைகளைப் பரிமாற்றிக்கொள்ளலாம். படத்தில், தன் அக்காவுடன் தாஜுதீன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ரவி சிங்காரம்

அதனால், அனைத்து ‘புத்தகப் பூச்சிகள்’ அட்டைகளையும் சேகரிக்கும் ஆர்வத்தில் மாணவர்கள் கூடுதலான நூல்களை இரவல் பெற்று படிக்கின்றனர்.

திட்டத்தின் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து சீன, மலாய், தமிழ் சார்ந்த அம்சங்களும் அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் ஐந்தாம் அத்தியாயம் ஜூன் 30ஆம் தேதி நிறைவடையும்; அதன்பின் அந்த அத்தியாயத்தின் அட்டைகளைப் பெற முடியாது. அதனால் அடுத்த சில நாள்களில் விரைந்து நூல்களை இரவல் பெறவும்!

முந்தைய அத்தியாயங்களைவிட அதிகமாக, ஐந்தாம் அத்தியாயத்தில் 100 அட்டைகள் வெளியிடப்பட்டன.

“ஏப்ரல் 2025 நிலவரப்படி, 486,000க்கும் மேற்பட்டோர் ‘புத்தகப் பூச்சிகள்’ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 9.1 மில்லியனுக்கும் மேற்பட்ட விளையாட்டு அட்டைகளைப் பெற்றுள்ளனர்,” என்றார் தேசிய நூலக வாரிய நூலகர் ஜமுனா.

இவ்வாண்டு தேசிய நூலக வாரியம் தன் 30வது ஆண்டு நிறைவை (NLB30) கொண்டாடுவதால் இரு புதிய ‘புத்தகப் பூச்சி’ அட்டைகளும் - “பேஜி”, “எம்பிரஸ்” - அறிமுகமாகியுள்ளன.

அவற்றை ஜூன் 23 முதல் 30ஆம் தேதி வரை அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள (புக்கிட் பாத்தோக், மரின் பரேட், ஆர்ச்சர்ட், சைனாடவுன், மத்தியக் கலைகள் நூலகங்கள் தவிர) புத்தகப் பூச்சி அட்டை விநியோகிக்கும் இயந்திரங்களில் பெறலாம்.

NLB30ஐயொட்டி, ஐந்து ‘புத்தகப் பூச்சி’ அத்தியாயங்களின் மொத்தம் 425 விளையாட்டு அட்டைகளையும் காட்சிப்படுத்தும் சிறப்புக் கண்காட்சியும் முதன்முறையாக இடம்பெற்றது.

வார இறுதியில் (ஜூன் 21, 22) மத்திய பொது நூலகத்தில் நடைபெற்ற அக்கண்காட்சியில் சிறுவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டு புதிருக்கு விடையளித்து, NLB30 ‘புத்தகப் பூச்சி’ அட்டைகளைப் பரிசாகப் பெற்றனர்.

சிறுவர்கள் தங்களது அட்டைகளை வைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் மும்முறை நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பதக்கம், கினோகுனியா புத்தகப் பற்றுச்சீட்டு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறுவர்கள் தமது அட்டைகளை வைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றனர். படத்தில் சகப் போட்டியாளர்களுடன் குஹன் சிவராம், 12 (சிவப்புச் சட்டையில்).
சிறுவர்கள் தமது அட்டைகளை வைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றனர். படத்தில் சகப் போட்டியாளர்களுடன் குஹன் சிவராம், 12 (சிவப்புச் சட்டையில்). - படம்: ரவி சிங்காரம்

சகோதரர்கள் நிக்ஹில் டான், 8, கப்ஹில் டான், 7, இவ்வாண்டுத் தொடக்கத்தில் விளையாட்டு அட்டைகளைச் சேகரிக்கத் தொடங்கினர்.

“என் நண்பன் இந்த அட்டைகளை வைத்திருப்பதைக் கண்டதும் நானும் அவற்றைப் பெற ஆசைப்பட்டு என் தாயாரிடம் கூறினேன். அப்படித்தான் தொடங்கினோம்.

“முன்பு நாங்கள் அவ்வளவாக நூலகத்துக்குச் செல்லமாட்டோம். இப்போது அட்டைகளைப் பெறுவதற்காகவே அடிக்கடிச் செல்கிறோம்,” என்றார் நிக்ஹில்.

இருவரும் ஃபேஸ்புக்கில் தங்களது அட்டைகளைப் பிறருடன் பரிமாறிக்கொள்ளவும் செய்கின்றனர்.

“சிலமுறை நான் அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்வேன். அவர்கள் அந்த நூலைப் படித்துமுடித்த பின்புதான் அவர்களுக்குத் தருவேன்,” என்றார் அவர்களுடைய தாயார் ஆரத்தி.

‘போக்கிமான்’ அட்டைகளைச் சேகரிப்பதில் அதிக நாட்டம் கொண்ட ஸ்வேதா, 11, சென்ற மே மாதம் முதல் ‘புத்தகப் பூச்சி’ அட்டைகளைச் சேகரித்துவந்துள்ளார். அதற்குள் 32 அட்டைகளைச் சேகரித்துவிட்டார்.

“எனக்கு இயற்கைசார்ந்த நூல்கள் மிகவும் பிடிக்கும். நான் ‘வால்மீகி’, ‘பறவைகள் சொல்லும் பண்பான கதைகள்’ போன்ற தமிழ் நூல்களையும் படிப்பேன்,” என்றார் ஸ்வேதா.

“நான் 100க்கும் மேற்பட்ட அட்டைகளைச் சேகரித்துள்ளேன். அவற்றைக் கொண்டு என் நண்பர்களுடன் விளையாடுவேன்,” என்றார் பாலர்பள்ளிப் பருவத்திலிருந்து நூலகத்துக்குச் சென்றுவந்துள்ள தாஜுதீன், 11.

100க்கும் மேற்பட்ட விளையாட்டு அட்டைகளைச் சேகரித்துள்ள தாஜுதீன், 11.
100க்கும் மேற்பட்ட விளையாட்டு அட்டைகளைச் சேகரித்துள்ள தாஜுதீன், 11. - படம்: ரவி சிங்காரம்

சிறப்புக் கண்காட்சியைக் காணத் தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம்! இதையடுத்து, ஜூன் 24 முதல் ஜூலை 27ஆம் தேதிவரை இக்கண்காட்சி ஐந்து நூலகங்களுக்கும், பின்பு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 17 வரை ஆசிய நாகரிக அரும்பொருளகத்துக்கும் இடம்பெயரும்.

மேல்விவரங்களுக்கு go.gov.sg/nlb-bookbugs, go.gov.sg/nlb30bb இணையத்தளங்களை நாடலாம்.

‘புத்தகப் பூச்சி’ அட்டைகள்.
‘புத்தகப் பூச்சி’ அட்டைகள். - படம்: ரவி சிங்காரம்

‘புத்தகப் பூச்சிகள்’ திட்டம் 2025 ‘இஃப்லா பிரெஸ் ரீடர்’ அனைத்துலக விளம்பரப்படுத்துதல் விருதின் இறுதிச் சுற்றுக்குச் செல்லும் பத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விருது விழா கசகஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும். இதே போட்டியில் தேசிய நூலக வாரியம் மற்றோர் இயக்கத்துக்காக 2020ல் இறுதிச் சுற்றுக்குச் சென்றது; 2009ல் முதல் நிலையில் வந்தது.

குறிப்புச் சொற்கள்