சின்னஞ்சிறு வயதிலேயே பள்ளிப் பாடத்தில் அதிக கவனம் செலுத்தி, ஓய்வு நேரத்தில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்து வாசித்து, உள்வாங்கி மனதில் நிறுத்தி, அதனை பிறருக்கு எளிதாகப் புரியும் விதத்தில் வெளிப்படுத்துகிறார் பதினைந்து வயதான ஸ்ரீகிருஷ்ணா.
இந்தியாவின் சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த பொறியாளர் மணிகண்டன்- அரசுப் பள்ளி ஆசிரியை ராதிகா தம்பதியின் மகனான அவர், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகிருஷ்ணாவிடம் பேசியபோது, “எனது பத்து வயதில் இருந்தே நூலகத்துக்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். அங்கு எண்ணிலடங்கா புத்தகங்கள் இருக்கின்றன. நூலகத்தில் இருந்து புத்தகங்களை இரவல் எடுத்து வந்து படிப்பேன்.
“தன்னம்பிக்கை வளர்க்கும் பல அறிஞர்களின் புத்தகங்களை படித்ததால், அதிலுள்ள நல்ல கருத்துகளை மற்றவர்கள் எளிதாகப் புரிந்துகொண்டு பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் நோக்கில், 49 மேற்கோள்களை உருவாக்கி அதற்கேற்ப சிறுகதைகளையும் ஆங்கில மொழியில் எழுதினேன்.
“எனது தன்னம்பிக்கையூட்டும் சிறுகதைகளை நூலாக வெளியிட எனது பெற்றோர் ஊக்கமளித்தனர்.
“எனது ‘கோட்ஸ் ஆஃப் மோட்டிவேட்டர்’ என்ற நூலை வெளியிட்டு இருக்கிறேன். பாட நூல்கள் மட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் வாசிப்பேன்,’’ என்கிறார் தன்னம்பிக்கை நிறைந்த ஸ்ரீகிருஷ்ணா.

