ஒருநாள் ரவி தன் தந்தையுடன் பூங்காவுக்குச் சென்றான். அங்கு உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த ரவிக்குப் பசித்தது.
“அப்பா, எனக்கு பர்கர் வேண்டும்,” எனத் தன் தந்தையிடம் கேட்டான்.
“சரி, ரவி. நாம் வீட்டிற்குச் சென்று பர்கர் செய்து உண்ணலாம்,” என்றார் ரவியின் தந்தை.
வீட்டிற்குச் சென்ற இருவரும் இணைந்து பர்கர் செய்ய ஆரம்பித்தனர். ரொட்டி, சுவையான காய்கறி வடை/ இறைச்சி வடை, சீஸ், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றின்மீது ஒன்றாய் அடுக்கினர்.
அடேயப்பா! எவ்வளவு பெரிய பர்கர்.
“அப்பா! இது மிகவும் உயரமாக இருக்கிறது. எப்படி இதைச் சாப்பிடுவது?,” எனக் கூறி சிரித்தான் ரவி.
“அவசரப்படாதே ரவி! விண்வெளி வீரரைப் போன்று, நீ இந்த பர்கரைச் சாப்பிட வேண்டும்!,” என்று ரவியின் அப்பா அவனிடம் வேடிக்கையாகச் சொன்னார்.
திடீரென்று, ரவியின் கையில் இருந்த பர்கர் வானத்தில் பறக்க ஆரம்பித்தது.
தொடர்புடைய செய்திகள்
“என் பர்கர் விண்வெளிக்குப் பறந்து செல்கிறதே!,” என்று ரவி கத்தினான்.
பின்னர் தன் படுக்கையறையில் இருந்த விளையாட்டு விண்கலனில் ஏறிப் பறக்கத் தொடங்கினான் ரவி.
விண்வெளியில் பர்கர் மிதந்து கொண்டிருக்க, ஒரு சிறிய, பச்சை நிற வேற்றுக்கிரகவாசி (green alien) அதன் அருகே வந்தார்.
அந்தப் பெரிய பர்கரைப் பார்த்து அவர் வியப்படைந்தார்.
தன் விண்கலனில் பர்கரைப் பின்தொடர்ந்து வந்த ரவி, அவரைக் கண்டான்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தனர்.
“நண்பரே! இது என் பர்கர். நான் மிகவும் பசியாக இருக்கிறேன். வாருங்கள் நாம் இருவரும் பர்கரைப் பகிர்ந்து உண்ணலாம்,” என்று அந்த வேற்றுக்கிரகவாசியிடம் சைகை மொழியில் பேசினான் ரவி.
ரவி சொன்னது புரிந்ததுபோன்று தலையசைத்தார் அந்த வேற்றுக்கிரகவாசி. இருவரும் சேர்ந்து, மிதக்கும் அந்தப் பெரிய பர்கரைச் சாப்பிட்டனர்.
ரவியைப் போன்று பகிர்ந்து உண்டால், பசியும் தீரும், புதிய நண்பர்களும் கிடைப்பர்!

