சிறுவர்களுக்கான கர்நாடக இசை கதை நூல்

3 mins read
52d6b007-3f9a-41a5-a629-0f29cefdba06
‘கச்சேரி ஆரம்பம்’/’Seven Swaras’ நூல் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்க் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடிய, அவற்றுக்கு நாட்டியம் படைத்த சிறுவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் முனைவர் கானவினோதன் ரத்னம் சான்றிதழ் வழங்கினார். - படம்: பரத்

சிறுவர்களுக்குக் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைகளை அறிமுகப்படுத்தும் கதை நூல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘கச்சேரி ஆரம்பம்’ என்றும் ஆங்கிலத்தில் ‘Seven Swaras’ (சப்த ஸ்வரங்கள்) என்றும் தலைப்புகொண்ட அந்நூலை உள்ளூர் சிறுவர் எழுத்தாளர் அபர்ணா கெள‌ஷிக், 30 எழுதி வெளியிட்டுள்ளார்.

‘கச்சேரி ஆரம்பம்’ நூல் அட்டை.
‘கச்சேரி ஆரம்பம்’ நூல் அட்டை. - படம்: அபர்ணா கெள‌ஷிக்/சஞ்ஜனா சேதுராமன்

குழந்தைகளை ஈர்க்கும் கதைக்களம்

சங்கீத பாடப்புத்தகங்கள் போல் அல்லாமல் இந்நூல் அழகான கற்பனைப் படங்கள், சுவாரசியமான கதைக்களத்துடன் சிறுவர்களைக் கவரும்.

ஏழு ஸ்வரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காட்டு விலங்குக் கதாபாத்திரமாக இடம்பெறுகிறது.

‘ச’ எனும் முதல் ஸ்வரத்தைப் பாடும் அழகிய மயில்.
‘ச’ எனும் முதல் ஸ்வரத்தைப் பாடும் அழகிய மயில். - படம்: அபர்ணா கெள‌ஷிக்/சஞ்ஜனா சேதுராமன்

நூலில் பல அறநெறிக் கருத்துகளும் பொதிந்துள்ளன. “மயில் என்றால் உருவத்தில் அழகு என எல்லாருக்கும் தெரியும். ஆனால் கதையில் வரும் மயிலின் குரலிலும் அழகு உள்ளது. ஒருவரின் உருவத்தைத் தாண்டியும் அவரிடத்தில் திறன்கள் பொதிந்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது,” என்றார் அபர்ணா.

மற்றொரு கதாபாத்திரமான அணிலுக்குப் பாடப் பிடிக்கும். ஆனால் பலர் முன்னிலையில் பாட அஞ்சுகிறது. மற்ற விலங்குகள் எவ்வாறு அதைப் பாட ஊக்கப்படுத்துகின்றன என்பதே கதைக் கரு.

நூல் அறிமுக நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர் முனைவர் கானவினோதன் ரத்னம் உடன் எழுத்தாளர் அபர்ணா கெள‌ஷிக் (நடுவில்), நூலின் ஓவியர் சஞ்ஜனா சேதுராமன் (இடம்).
சிறப்பு விருந்தினர் முனைவர் கானவினோதன் ரத்னம் உடன் எழுத்தாளர் அபர்ணா கெள‌ஷிக் (நடுவில்), நூலின் ஓவியர் சஞ்ஜனா சேதுராமன் (இடம்). - படம்: அபர்ணா கெள‌ஷிக்/சஞ்ஜனா சேதுராமன்

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13ஆம் தேதி காலை உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் முன்னணிக் குழலிசைக் கலைஞரும் கலாசாரப் பதக்கம் விருதுபெற்றவருமான முனைவர் கானவினோதன் ரத்னம் அந்நூலை வெளியிட்டார்.

“என் ஐந்து வயது மகள் அக்‌‌ஷராதான் இந்நூலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தார். வளரும்போது அவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது. ஆனால் பாலருக்கான கர்நாடக இசை வளங்களை, அதாவது நூல்கள், விளையாட்டுகள் போன்றவற்றை நூலகங்களிலும் கடைகளிலும் தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை,” என்றார் அபர்ணா.

முன்பே ‘பாரதியார் ஆத்திசூடி’ என்ற சிறுவர் நூலை எழுதியிருந்ததால் தானே ஒரு கர்நாடக இசை சிறுவர்க் கதை நூலையும் எழுதும் தன்னம்பிக்கை அபர்ணாவுக்கு இருந்தது.

“என் மகள் போன்ற பல சிறுவர்களும் இந்நூல்வழிப் பயனடைவார்கள் என எனக்குத் தோன்றியது. இந்நூல் ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் கையில் எடுத்துப் படிக்கும் வகையில் எளிய வாக்கியங்கள், கனமான பக்கங்களுடன் இருக்கிறது,” என்றார் அபர்ணா.

இந்நூலில் உள்ள அழகிய படங்களைச் சஞ்ஜனா சேதுராமன், 22, வரைந்துள்ளார். நன்யாங் நுண்கலைக் கழகத்தில் வடிவமைப்புப் பட்டயம் முடித்துள்ளார். “சிறுவயதிலிருந்து எனக்குக் கைவினைப் பொருள்களைப் பின்னுவதிலும் பல்வகையான ஓவியங்கள் - குறிப்பாக அனிமேஷன், மின்னிலக்க ஓவியங்கள் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் பெற்றோருக்கும் உறவினருக்கும் அவற்றை அன்பளிப்பாக வழங்குவேன்.

“இயற்கையோடு ஒன்றிய பல்வகை விலங்குகளும் பறவைகளும் பேசுவது, இசைப்பதை வரைவது நன்றாக இருந்தது. ஒரு கலைமூலம் மற்றொரு கலையின் கற்றலுக்கு வழிவகுக்கிறது இந்நூல்,” என்றார் சஞ்ஜனா.

தன் மகளின் பெயரில் சென்ற ஆண்டு தொடங்கிய ‘அக்‌‌ஷரா கிரியே‌‌ஷன்ஸ்’ நிறுவனத்தின்மூலம் அபர்ணா இந்நூலை வெளியிட்டுள்ளார். அடுத்து தாம் மற்ற கதை நூல்களையும் எழுதி ஒரு தொடராக்க அவர் விரும்புகிறார்.

இசைக் கலைஞர்களிடம் இருந்து வாழ்த்துகள்

“இம்முயற்சியை நான் பாராட்டுகிறேன். அறிவியல், கணிதம், ஆங்கில நூல்கள் பரவலாக இருக்கையில் கர்நாடக இசைக்காக இத்தகைய நூலை நான் இதுவரை கண்டதில்லை.

“பல பெற்றோரும் எந்த வயதில் தம் பிள்ளைகள் கர்நாடக இசையைக் கற்கத் தொடங்கலாம் எனக் கேட்பது உண்டு. இத்தகைய நூல்கள்மூலம் சிறுவயதிலேயே சிறுவர்களுக்குக் கர்நாடக இசைமீது ஆர்வம் ஏற்படும்,” என்றார் விருதுகள் வென்றுள்ள கர்நாடக சங்கீதப் பாடகரும் ஆசிரியருமான சந்தீப் நாராயண்.

“இந்நூலை நாங்கள் படித்தோம். மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் ஒரு கதாபாத்திரத்துடன், குழந்தைகளுக்குப் பிடித்த கதையாக அமைகிறது,” எனப் பாராட்டினர் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்‌ஷினி.

நூலை வாங்க https://www.abcsoftamil.com/ இணையத்தளத்தை நாடலாம்.

-
குறிப்புச் சொற்கள்