தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சொற்போர் விவாதப்போட்டியில் இவ்வாண்டு கேஸ்வெரினா தொடக்கப்பள்ளி வெற்றிவாகை சூடியுள்ளது.
இந்த இறுதிப்போட்டி, பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தமிழர் பேரவையால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இவ்விவாதப் போட்டியின் தகுதிச் சுற்றில் 18 பள்ளிகள் பங்கேற்றன. சிறந்த எட்டு பள்ளிகள் காலிறுதியிலும், நான்கு பள்ளிகள் அரையிறுதியிலும் போட்டியிட்டன.
இந்த ஒன்பதாவது சொற்போர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஏப்ரல் 19ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது. இதில் கேஸ்வெரினா தொடக்கப்பள்ளியும் ஹவ்காங் தொடக்கப்பள்ளியும் மோதின.
மனதளவில் இளமையுடன் இருப்பதற்கு பணத்தைவிட உறவுகளே காரணமாக அமைகின்றன எனும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசினர்.
இரண்டாவது சுற்றில் மேடையில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் குறைந்த நேரத்தில் தயார் செய்து தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
பேராளர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏறத்தாழ 300 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சுற்றுகளில் சிறப்புப் பேச்சாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் பரிசுகளும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
இறுதிப்போட்டியில் கேஸ்வெரினா தொடக்கப்பள்ளி மாணவர் அத்விக் முரளீஸ்வரன் சிறப்புப் பேச்சாளர் பரிசைப் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இரண்டு மாதங்கள் தொடர்ந்து அளித்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழிமீது ஆர்வமும் அதிகரித்துள்ளது,” என்றார் அத்விக்.
குழுவிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பேச்சுத் திறன், உச்சரிப்பு சிறப்பாக இருந்தது எங்கள் அணிக்குப் பலம் சேர்த்தது,” என்றார் வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த மாணவர் ஷஷாங்க் கார்த்திக்.
தொடக்கப் பள்ளி மாணவர்களால் இவ்வளவு அருமையாகப் பேச முடியுமா என வியக்க வைத்தனர் மாணவர்கள். யாரை வெற்றியாளராகத் தேர்ந்தெடுப்பது என்பதில் நடுவர்களுக்கிடையே ஒரு தனி சொற்போரே நடைபெற்றது,” என்றார் இறுதிப்போட்டியில் நடுவராகப் பங்காற்றிய இர்ஷாத் முகம்மது.
கடும் போட்டிகொடுத்த இரு பள்ளிகளுக்கு இடையில் சிறு வித்தியாசத்தில் கேஸ்வெரினா தொடக்கப்பள்ளி வெற்றி வாகை சூடியதாகவும் குறிப்பிட்டார் அவர்.
“இந்தப் போட்டிகளுக்காக நிறைய உழைப்பைக் கொடுத்தோம். இறுதிவரை வந்ததே பெரிய வெற்றியென நினைக்கிறோம். ஒரு அணியாகச் செயல்பட்டதும், பல்வேறு புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொண்டதும் நல்ல அனுபவம்,” என்றார் ஹவ்காங் தொடக்கப்பள்ளி மாணவி ஜெயவேல் ஜெசிக்கா ஸ்ரீ.
“மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து பெருவரவேற்பு கிடைத்து வருகிறது. மாணவர்களின் சொல்வீச்சு, மொழிவளம், திறன் ஆகியவை வியப்பளிக்கிறது,” என்றார் தமிழர் பேரவையின் பொதுச் செயளாலர் அருண் வாசுதேவ் கிருஷ்ணன்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏற்பாட்டுக் குழுவில் பணியாற்றும் இவர், பிப்ரவரி 22ஆம் நாள் தொடங்கிய இப்போட்டிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாட்டுக் குழுவைத் தவிர 30 முதல் 50 தொண்டூழியர்கள் அயராது உழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.