அன்று வகுப்பிற்கு வந்த தமிழ் ஆசிரியர் எங்களிடம், “நீங்கள் மேற்கொண்ட சவால்களில் ஒன்றைக் கட்டுரையாக எழுதுங்கள்,” என்று கூறினார்.
அனைவரும் எதைப்பற்றி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது நான் சிறிதும் யோசிக்காமல் எழுதத் தொடங்கினேன்.
சிறுவயதில் இருந்தே எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தது. அதை அப்போது என் பெற்றோரும் பெரிதாக நினைக்கவில்லை. நாள்கள் செல்லச் செல்ல என் நகம் கடிக்கும் பழக்கம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
வீட்டில் செய்வதோடு பள்ளியில் வகுப்பறைகளிலும் நகம் கடிக்கத் தொடங்கினேன். அதனை என் ஆசிரியர்கள் பலரும் பார்த்து என்னைக் கண்டித்தனர்.
என் வகுப்பு மாணவர்களும் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தது. இருந்தாலும் என்னால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை.
ஒருநாள் நான் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினேன். எப்போது எல்லாம் நகம் கடிக்கிறேன் என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன்.
எனக்கு மனவுளைச்சல் ஏற்படும்போது அல்லது கோபமாக இருக்கும்போது என்னை அறியாமல் என் விரல்கள் வாயை நோக்கிச் செல்வதை உணர்ந்தேன்.
இதை எப்படியாவது நாம்தான் கட்டுப்படுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்குச் செல்லும்போது என் அன்னையிடம் என் விரல் நகத்தைச் சுற்றி காயப்பட்டால் போடும் பிளாஸ்டரைச் சுற்றச் சொல்லி, அப்படியே பள்ளிக்குச் சென்றேன்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டில் இருக்கும்போது கையுறைகளைப் போடத் தொடங்கினேன். அல்லது பள்ளிப் பாடங்களை எழுதிக்கொண்டே இருந்தேன். அது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தாலும் நாள்கள் செல்லச் செல்ல அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன்.
அந்தப் பழக்கத்தை விட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது என் நகங்கள் அனைத்தும் சுத்தமாக, அழகாக இருக்கின்றன. எங்காவது யாராவது நகம் கடிப்பதைப் பார்த்தால் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் நினைவுக்கு வரும். எனக்குள் நானே சிரித்துக்கொள்வேன்.
அது எனக்கு மிகவும் சவாலான ஒரு காலகட்டமாக இருந்தது என்று கட்டுரையை எழுதி ஆசிரியரிடம் கொடுத்தேன். அவரும் கட்டுரையைப் படித்துவிட்டு என்னை அருகில் அழைத்து, “இதுபோல் வாழ்க்கையில் பல சவால்கள் வரும். அனைத்தையும் சமாளிக்கத் தெரியவேண்டும். வாழ்த்துகள்,” என்று கூறி பாராட்டினார்.
ஷார்லின் ஜான் உயர்நிலை 4 யூ ஹுவா உயர்நிலைப்பள்ளி

