பெரும்பாலான விளையாட்டுகள் அணிகளோடு விளையாடும் விளையாட்டுகள். ஆகவே வெற்றியோ தோல்வியோ ஒருவர் மட்டும் சுமக்கத் தேவையில்லை. அது ஒரு தனி மனிதனைப் பெரிய அளவில் பாதிக்காது.
ஒரு வீழ்ச்சி என்றால் அது மொத்த அணிக்கான வீழ்ச்சி என்று ஆகிவிடும். வெற்றி என்றாலும் தனிமனித வெற்றியாக கருத முடியாது.
ஆனால், சதுரங்க விளையாட்டு தனிமனித ஆளுமைக்கும் அறிவாற்றலுக்கும் விடக்கூடிய சவாலான விளையாட்டு.
இருவர் விளையாடும் உள்ளரங்கு விளையாட்டு வகைகளில் சில விளையாட்டுகள் இருந்தாலும் அது பெரும்பாலும் உடல் உழைப்பை சார்ந்தவையாக இருக்கும். ஆனால், சதுரங்கம் மட்டுமே மூளை உழைப்பைச் சார்ந்தது.
நமக்கு முன்பு 64 கட்டங்கள் இருந்தாலும் அந்தக் கட்டங்களையும் ஒரு ராஜா, ஒரு ராணி, இரு தளபதிகள், இரண்டு குதிரைகள், இரண்டு யானைகள் அல்லது கோட்டைகள், எட்டு சிப்பாய்கள் இவர்களை வைத்துக் கொண்டு எதிரி நாட்டுப்படைகளை வீழ்த்தியோ வீழ்த்தாமலோ எதிரி நாட்டு மன்னனை சிறை வைக்க வேண்டும் என்பதுதான் விளையாட்டின் நோக்கம்.
கருப்பர் படை , வெள்ளையர் படை என்று இரண்டு படைகளும் மோத வேண்டும்.
இந்தப் போரில் உள்ள சிக்கலே மன்னரைக் காப்பாற்றிக் கொண்டு அதைவிட முக்கியமாக ராணியையும் காப்பாற்ற வேண்டும். பின் ராணி, தளபதிகள், குதிரைகள் அல்லது கோட்டை மூலமாகவோ தம்மைக் காப்பாற்றிக் கொண்டே எதிரி நாட்டை நோக்கி முன்னேற வேண்டும்.
முன்னேறி எதிரி நாட்டு ராஜாவுக்கு செக் வைக்க வேண்டும். இந்த செக் என்னும் வளைக்குள் ராஜா சிக்கிக்கொண்டு வெளியேற முடியாவிட்டால் செக் வைத்தவர் வெற்றி பெற்றவராவார்.
தொடர்புடைய செய்திகள்
சாதாரணமாக சிப்பாய்களுக்கு பெரிய ஆற்றல் இல்லை. ஆனால், சமயத்தில் ஒரு சிப்பாய் கூட ராஜாவுக்கு செக் வைக்க வேண்டிய ஆட்டம் அமையலாம்.
அப்படி ஆட்டம் ஆடுபவர்கள் தேர்ந்தவர்கள் ஆவார்கள். நம்முடைய ஒவ்வொரு காயும் எதிரி நாட்டு படைக் கருவிகள் அல்லது சிப்பாய்கள் வீழ்த்தும்போது மனரீதியாக பாதிக்கப்படுவோம்.
உளவியல் ரீதியான இந்த பாதிப்பு ஆட்டத்தின் தோல்விக்கு காரணமாகிவிடக் கூடும். மனச்சோர்வை உண்டாக்கும். அடுத்த ஆட்டத்தை தொடர முடியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கும். ஆடுபவர்களுக்கு சவாலாக அமையும்
இந்த விளையாட்டில் உள்ள முக்கியமான அம்சமே உளவியல் பாதிப்பு தான்.
சதுரங்கம் விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னடக்கத்துடன் இருப்பார்கள். அதனால் அவர்கள் பெறும் வெற்றியை ஆரவாரம் இன்றி கொண்டாடுவார்கள்.
காரணம் அதில் நுண்ணறிவும் கண் எனும் புலனறிவும் இணைந்து பயன்படக்கூடிய அறிவார்ந்த விளையாட்டு என்பதால் இந்த தன்னடக்கம் வேண்டப்படுகிறது
ஒரு காலத்தில் மன்னர்கள் விளையாடிய விளையாட்டு. இந்தியாவில் தோன்றி பாரசீகம் சென்று அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய விளையாட்டு சதுரங்க விளையாட்டு ஆகும்.

