கலை, விளையாட்டுகள் மூலம் சிறுவர்களின் கற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் எட்டுக் கலை நிறுவல்களுடன் ‘நாளை என்பது…’ எனும் கருப்பொருளில் அமைந்த ‘சில்ட்ரன்ஸ் பியனாலே’ மே 31ஆம் தேதி தொடங்கவுள்ளது.
குழந்தைகள் தம் மனங்களில் எல்லையின்றிக் காணும் கனவு, மகிழ்ச்சி, கருணை, அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களின் எண்ணத்தில் உருவாகியுள்ள இந்தப் பெரிய நிறுவல்கள் சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் வரும் மே 31ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பயிற்சியாகவும், செயல்பாடுகளாகவும் அமையும் வண்ணம் இரு ‘ஆர்ப் பேக்’ எனும் கலைப் படைப்புப் பொருள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுச் சிறுவர்களுக்கும் ஏற்ற வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சி என்பது பங்கிட்டுக்கொள்வதில் அமைகிறது என்பதை வலியுறுத்தும் ‘எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுதல்’ எனும் கலைப்படைப்பை வடிவமைத்துள்ளார் உள்ளூர்க் கலைஞர் ஃபெர்ன் வோங்.
நிறங்கள், தொடுதலில் மாறுபடும் இழைநயங்கள், வடிவங்கள் ஆகியவற்றை உணரும் வகையில் இது அமைந்துள்ளது. வெவ்வேறு விதமான வடிவங்களைத் தொட்டுணர்ந்து, பரிமாறிக்கொள்ளவும், காந்த சக்தியுடன் அவற்றை மாற்றி ஒட்டிவைத்து விளையாடவும் இந்நிறுவல் அனுமதிக்கிறது.
அன்பு, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் ஆகியவற்றை உணர்த்தும் ‘அன்புப் பூங்கா’ எனும் நிறுவலை வடிவமைத்துள்ளார் ஜப்பானியக் கலைஞர் ஹிரோமி டாங்கோ.
தொடுதல், பார்வை, நுகர்தல், கேட்டல் எனப் பல உணர்வுகளை உணரும் வகையிலும் பார்வையற்றோரின் ‘பிரெயில்’ முறை எழுத்துகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையிலும் இந்நிறுவல் அமைந்துள்ளது. வண்ணமயமான பெரிய தாமரைப் பூக்கள், ஒளி விளக்குகள், மெல்லிய இசை ஆகியவற்றுடன் குழந்தைகளைக் கவரும் நிறுவல் இது.
தொடர்புடைய செய்திகள்
அன்பு, இரக்கம், ஒன்றிணைவு ஆகியவற்றை உணர்த்தும் ‘நான் நாம் நாங்கள்’ நிறுவல், சூழ்நிலையுடன் இயைந்து பழகுவதை வலியுறுத்தும் நிறுவல், பொம்மைகள், பயன்படுத்தப்பட்ட குழந்தைகளின் உடைகளாலான மெத்தை போன்ற விளையாட்டு இடம் என அர்த்தமுள்ள கலை நிறுவல்கள் குழந்தைகளின் எல்லையற்ற கற்பனையைத் தூண்டும் நோக்கில் அமைந்துள்ளன.