இந்திய மரபுடைமை நிலையம் அதனுடைய 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை மே 10ஆம் தேதியும் மே 11ஆம் தேதியும் சிறப்பாக நடத்தியது.
புதுப்பிக்கப்பட்ட காட்சிக்கூடங்கள், அவற்றைச் சார்ந்த மரபுடைமை நிகழ்ச்சிகள், கலாசார நடவடிக்கைகள் முதலியவை அதில் இடம்பெற்றன.
காட்சிக்கூடங்களில் சிங்கப்பூரில் உள்ள இந்திய, தெற்காசிய சமூகங்களின் பங்களிப்புகள் குறித்த அரிய தகவல்களை வழங்கும் 30 புதிய கலைப்பொருள்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
கொண்டாட்டங்களின் மற்றொரு அங்கமாக இலவச கைவினைப் பொருள்கள் உருவாக்குதல், வண்ணம் தீட்டுதல் பட்டறைகள் நடைபெற்றன. வருகையாளர்கள் பாரம்பரிய இந்திய நடனக் கலைஞரின் வடிவிலிருந்த ‘சன் கேட்ச்சர்’களை வண்ணமிடுவது, செட்டி மலாக்கான் துணிகளைப் பயன்படுத்தி புத்தகம் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.
இத்துடன், நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சமூக நாடகத்தின்வழி பெரனாக்கன் இந்திய திருமணத்தை நேரில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் வருகையாளர்கள் பெற்றனர்.
தனது தாயாருடனும் பாட்டியுடனும் இந்திய மரபுடைமை நிலையத்தின் கொண்டாட்டத்தில் பங்கேற்றார் வரஷன், 7.
கலை நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், தனது சொந்த கலை வடிவமைப்புகளை உருவாக்க முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டதாக சொன்னார்.
“பெரனாக்கன் இந்திய திருமண அனுபவமும் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் பார்த்த விதவிதமான ஆடைகளும் பண்பாட்டு முறைகளும் நாம் வழக்கமாக இந்திய திருமணங்களில் பார்ப்பதைவிட மாறானதாக இருந்தன,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்நிலையம் அதைப் பேணிக்காப்பதில் பெரிய பங்கை வகித்து வருகிறது என்றார் வரஷனின் தாயார் ஷர்மினி, 34.
“புதுப்பிக்கப்பட்ட காட்சிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று கேள்விப்பட்டேன். பல பள்ளிகள் இந்திய பண்பாட்டைப் பற்றிக் கற்பிக்கும்போது, மாணவர்களை இங்கு அழைத்து வருகின்றன. பள்ளியில் பாடப்புத்தகங்கள்மூலம் கற்றுகொள்வதோடு, இங்கு நேரில் வந்து நமது கலாசாரத்தை பார்த்து, அனுபவிக்கும்போது மாணவர்களின் புரிதல் இன்னும் பல மடங்காக ஆழமாகிறது,” என்று அவர் கூறினார்.
“நான் என் குடும்பத்துடன் அடிக்கடி இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வருவேன். சிறிது காலத்துக்கு முன்னதாக ஒரு கதைசொல்லல் நிகழ்ச்சிக்காகவும் இங்கு வந்தேன். இங்குள்ள நிகழ்ச்சிகள்மூலம் இந்திய கலாசாரத்தைப் பற்றி நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிவதால் இங்கு வருவது எனக்கு மிகவும் விருப்பம்,” என்றார் அஞ்சணேஷ் ஓம்காரா, 7.
“எனக்கு வண்ணம் தீட்டுவது தான் ரொம்ப பிடிக்கும்! ஏனென்றால் அதில் நிறைய வண்ணங்கள் இருந்தன,” என்றார் அக்னிலோச்சனா ருத்ரா, 5.
“இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் நாங்கள் ஏற்கெனவே பங்கேற்றுள்ளோம். இன்றைய நிகழ்ச்சி குறித்து சமூக ஊடகங்களில் தெரிந்து கொண்டோம். எங்கள் பிள்ளைகளை இந்திய கலாசாரத்தில் ஈடுபடுத்த ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, குடும்பமாக நேரத்தைச் செலவிடும் நோக்கத்துடன் இங்கு வந்தோம்,” என்றார் திருவாட்டி ஆரதனா, 37.
“இன்றைய குழந்தைகள் இந்தியர்களின் பண்பாட்டைப் பற்றி ஆழமாக அறிந்திட வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. பெரும்பாலும் அவர்கள் உணவு வகைகள் போன்ற மேலோட்ட விஷயங்களை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அவர்களின் சிந்தனைத்திறன் தூண்டப்பட்டு, அவர்கள் பல கேள்விகளை எழுப்ப ஆரம்பிக்கிறார்கள்,” என்றார் திரு ஆனநத் பிரபு, 39.

