சொங் பாங் தினத்தில் சிறுவர்களின் கொண்டாட்டம்

2 mins read
ab8f84bc-8a4d-4aca-9f81-e89aac6850f2
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதரிகள் அருந்தமிழ் அமிழ்தினி, செந்தமிழ் யாழினியுடன் தோழி கோமகள். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 5

சிங்கப்பூரின் பழமையான வட்டாரங்களில் ஒன்றான சொங் பாங் வட்டாரம், சமூக உணர்வை மையப்படுத்தி ஆண்டுதோறும் சொங் பாங் தினத்தைக் கொண்டாடி வருகிறது.

அவ்வகையில், இவ்வாண்டு நவம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலையில் ஈசூன் ரிங் ரோடு, புளோக் 165 திடலில் சொங் பாங் தினம் கொண்டாடப்பட்டது.

அங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் வண்ணம் பல சாவடிகளும் இடம்பெற்றிருந்தன.

தகவல் நிறைந்த கண்காட்சிகள், சுவையான நடவடிக்கைகள், உடற்பயிற்சி, சிற்றுண்டிகள் என பலவற்றில் பங்கேற்று சிறுவர்கள் பொழுதை இனிதே களித்தனர்.

கைவினை நடவடிக்கைகளில், ‘பிலே டவ்’ - அதாவது களிமண் கொண்டு பொருள்களை வடிவமைப்பது தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார் ஜியா ஆன்விர், 5. சொங் பாங் மலாய் நற்பணிச் செயற்குழுவின் சாவடியில் இதைச் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

சொங் பாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு (ஐஏஇசி) சாவடியும் அவர்களுக்கு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பை வழங்கியது.

“சிறுவர்களைக் கூடுதலாக ஈர்க்க பள்ளிகளுடன் கைகோக்க விரும்புகிறோம்,” என்றார் ஐஏஇசி தலைவர் பிரவீன் சந்திரன்.

“ஓவியம் தீட்டினோம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இலவச நூல்களைப் பெற்றுக்கொண்டோம். பல்லாங்குழி விளையாடினோம். சுவையான உணவு உண்டோம்,” என்றனர் தம் 5 வயது தோழி கோமகளுடன் வந்திருந்த சகோதரிகள் அருந்தமிழ் அமிழ்தினி, 6, செந்தமிழ் யாழினி, 8.

பைரோகிராஃபி (Pyrography) பேனாவைக் கொண்டு மரப் பலகையில் புதிய வடிவங்கள் வடிவமைத்தது தம்மைக் கவர்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.

“அதிக விளையாட்டுகள் இருந்தன. அவற்றில் சேர்ந்து ஈடுபடும்போது எங்களின் நட்பு அதிகரித்ததை உணர்ந்தேன். விளையாட்டுகளில் ஈடுபடும்போது அறிவுத்திறனும் மேம்பட்டது. எங்களுக்கும் எப்பொழுதும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மன நிம்மதியாக இருக்கிறது,” என்றார் நண்பர்களுடன் வந்திருந்த ஹாசினி லோகே‌ஷ்குமார், 12.

இதற்கிடையே உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், உடற்பயிற்சிச் சவாலில் கலந்துகொண்டு, தன் உடல் எடைக்கு ஈடான 65 கிலோகிராம் பளுவை 102 முறை தூக்கித் தன் சொந்த சாதனையை முறியடித்தார். அவர் சிறுவர்கள், வட்டாரவாசிகளுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்.

சொங் பாங் தொன்மையைப் பாராட்டும் “புளோக் 102 நினைவுகள் - ஒரு சொங் பாங் கதை’ எனும் காப்பி மேசை நூலையும் அமைச்சர் சண்முகம் வெளியிட்டார். அது நீ சூனில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். இதன்மூலம் சிறார்கள் ஈசூன் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்