அறப்பணிக்காக மேடையேறிய சிறார்கள்

அறப்பணிக்காக மேடையேறிய சிறார்கள்

படம்: லிஜேஷ் கருணாகரன் 

16 Mar 2026 - 5:30 am

2 mins read

இலங்கையின் கடல்பகுதியில் உருவான ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் நோக்கில், சிங்கப்பூரிலுள்ள ‘இலங்கையின் நண்பர்கள்’ அமைப்பும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து ‘ஒற்றுமையின் நடனங்கள்’ (Dances of Unity) எனும் நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியை நடத்தின.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சி, மார்ச் 5 இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிஜிபி மண்டபத்தில் அரங்கேறியது.

ஒன்பது கலை அமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய 90 நடனமணிகள் 14 நடன அங்கங்களைப் படைத்தனர்.

கதக் நடனத்தைக் கற்றுத்தரும் ‘தட்வா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிய அனுபவத்தைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

சிங்கப்பூர் அமெரிக்கப் பள்ளியில் பயிலும் 9 வயது அரியானா கார்க், “நான்  பிராட்வே ஜாஸ் கற்று வருகிறேன். ஆயினும், கதக் நடனம் மிகவும் அழகானது. அந்த நடன முறை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அரியானா கார்க்.
அரியானா கார்க். - படம்:  லிஜேஷ் கருணாகரன் 

“என் அம்மாவுடன் சேர்ந்து கதக் கற்றுக்கொள்வதுதான் மிகச்சிறந்த விஷயம். மேலும், எங்கள் ஆசிரியர் எங்களுக்கு இதை மிகவும் எளிமையாகவும் வேடிக்கையாகவும் சொல்லிக்கொடுக்கிறார்,” என்றார்.

‘யுடபிள்யூசி’ தென்கிழக்காசிய அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த மிஹிகா வியாஸ், 9, “புதியவர்களுடன் இணைந்து கற்றுக்கொண்டதும் ஆடியதும் மிகுந்த ஊக்கமளித்தது. அது கதக் நடனத்தை ஒரு புதிய கோணத்தில் பார்க்க எனக்கு உதவியது. 

மிஹிகா வியாஸ்.
மிஹிகா வியாஸ். - படம்:  லிஜேஷ் கருணாகரன் 

“கதக் என்பது நளினத்தையும் அடவுகளையும் நினைவில் வைத்துக்கொள்வது மட்டுமல்ல, அந்த நடனத்தை ரசித்து மகிழ்வதும்கூட என்பதை நான் உணர்ந்தேன்,” என்று கூறினார். 

வைஸ் ஓக்ஸ் அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த 10 வயது ஷேத்ரக்னா மூலா, “கதக் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்று, பலர் முன்னிலையில் நடனமாடியது எனக்கு நம்பிக்கையும் பெருமையும் அளித்தது.

ஷேத்ரக்னா மூலா.
ஷேத்ரக்னா மூலா. - படம்:  லிஜேஷ் கருணாகரன் 

“எங்கள் நடன ஆசிரியர் நடாஷா, மாணவர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டவர். நாங்கள் நடனக் கலைஞர்களாக மட்டுமின்றி, தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் வளர அவர் உதவுகிறார்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
நடனம்மாணவர்கள்நன்கொடை