சிறுவர்களின் ‘பொங்கலோ பொங்கல்!’

2 mins read
பொங்கல் பண்டிகை சிங்கப்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு வயல்கள், வீடுகளில் மாடுகள் இல்லாவிட்டாலும் தமிழர் பண்பாட்டை நாம் மறவாமல் காத்துவருகிறோம்.
967b5718-3896-4691-9a72-298ee52085b6
பொங்கல் பானையை முதன்முறையாகக் கண்டு வியக்கும் 14 மாதக் குழந்தை இனே‌‌‌ஷா அர்வின். - படம்: ரவி சிங்காரம்

கடந்த இரு வாரயிறுதிகளில் இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடுசெய்த பொங்கல் நிகழ்ச்சிகளில் சிறுவர்களுக்காகப் பல நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

மாடு, வயல் எனக் கிராமியச் சூழலை மெய்ப்பித்தன, அழகாக அலங்கரிக்கப்பட்ட கண்காட்சிகள்.

நிலையத்தின் நுழைவாயிலில் சுளகில் நெல்லைப் புடைக்கும் நடவடிக்கை பல சிறாரையும் கவர்ந்தது.

“என் அம்மா நெல் புடைப்பதை நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் சிந்திவிடுவேனோ என வீட்டில் என்னை நெல் புடைக்க விடமாட்டார். அதனால் நெல் புடைத்தது இதுவே எனக்கு முதல் முறை,” என்றார் தே‌ஷிகா. அவரது தாயார், புள்ளிக் கோலம் போடச் சிறார்களுக்குக் கற்பித்தார்.

நெல் புடைக்கும் தே‌ஷிகா.
நெல் புடைக்கும் தே‌ஷிகா. - படம்: ரவி சிங்காரம்
நெல்லைப் புடைக்கும் இன்பா, 5 (இடம்).
நெல்லைப் புடைக்கும் இன்பா, 5 (இடம்). - படம்: ரவி சிங்காரம்

3 வயது இ‌‌‌ஷான்வி சங்கீத்துக்குப் பொங்கல் பானையில் வண்ணந்தீட்டுவதிலும் மாட்டுப் பொம்மையை அலங்கரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரது தந்தை தமிழர். தாயார் பெங்காலி. “என் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து என் மகளுக்குக் கற்பிக்க இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது,” என்றார் தந்தை சங்கீத்.

பெற்றோருடன் இ‌‌‌ஷான்வி சங்கீத், 3.
பெற்றோருடன் இ‌‌‌ஷான்வி சங்கீத், 3. - படம்: ரவி சிங்காரம்

பொங்கல் பற்றிய சிறப்பு நடவடிக்கை நூலையும் நிலையத்தின் நுழைவாயிலில் சிறார்கள் பெற்றனர்.

நிலையத்தின் மூன்றாம் தளத்தில் அக்காலத்தில் சிங்கப்பூரில் தமிழர்கள் வைத்திருந்த கடைகளை மாதிரிப்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றது. அதைக் கண்டு ரசித்தனர் சகோதரிகள் சம்யுக்தா, சஹானா. “எனக்குப் பொங்கல் பானையில் வண்ணந்தீட்டுவது, புள்ளிக் கோலம் போடுவது, சாவிக்கொத்து செய்வது போன்றவைப் பிடித்திருந்தன,” என்றார் சம்யுக்தா, 8.

சகோதரிகள் சம்யுக்தா, சஹானா.
சகோதரிகள் சம்யுக்தா, சஹானா. - படம்: ரவி சிங்காரம்

கண்காட்சியைக் கண்ட ரித்திகா, 9, “மீ கொரெங், இந்திய ரோஜாக், மீன் தலைக் கறி போன்ற சிங்கப்பூரின் பிரத்தியேக உணவுகளைக் காட்டும் ‘சந்திராஸ் உணவகம்’ பிடித்திருந்தது. ‘ஆனந்தம் பொற்சாலை’யில் தங்கம் அசல் போலவே மிளிர்ந்தது,” என்றார்.

நிலையத்தின் வெளிப்புறத்தில் ‘மீடியாகார்ப்’ ஏற்பாடுசெய்த சிறப்புப் பொங்கல் நிகழ்ச்சியையும் சிறார்களும் பொதுமக்களும் கண்டு மகிழ்ந்தனர்.

நிலையத்தின் மூன்றாம் தளக் கண்காட்சியைக் கண்டு ரசித்த ரித்திகா.
நிலையத்தின் மூன்றாம் தளக் கண்காட்சியைக் கண்டு ரசித்த ரித்திகா. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்