சிறுவர்களின் ‘பொங்கலோ பொங்கல்!’

2 mins read
cb406094-0689-47e8-be2e-ed54b5c419de
முறத்தில் நெல்லை புடைக்கிறார் இந்தச் சிறுமி. - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நம் நாட்டில் வயல்வெளிகள், வீடுகளில் மாடுகள் இல்லாவிட்டாலும், நம் தமிழ்ப் பண்பாட்டை நாம் என்றும் மறவாமல் காத்து வருகிறோம்.

கடந்த இரண்டு வாரங்களாக, ‘இந்திய மரபுடைமை நிலையம்’ சிறுவர்களுக்காகப் பல சுவாரசியமான பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்தியது.

கண்காட்சி நடந்த இடம், ஓர் உண்மையான கிராமம் போலவே இருந்தது. அழகிய மாடுகள், வயல்வெளிகள் என அந்த இடமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

நிலையத்தின் நுழைவாயிலில், முறம் (சுளகு) கொண்டு நெல் புடைக்கும் நிகழ்வு பல சிறுவர்களைக் கவர்ந்தது.

“என் அம்மா நெல் புடைப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால், நான் கீழே கொட்டிவிடுவேனோ என்று வீட்டில் என்னைச் செய்ய விடமாட்டார். நெல்லைப் புடைத்தது இதுவே எனக்கு முதல் முறை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது!” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் தே‌ஷிகா.

தேஷிகாவின் அம்மா, சிறுவர்களுக்குப் புள்ளிக் கோலம் போடவும் கற்றுக் கொடுத்தார்.

மூன்று வயதுச் சிறுமி இ‌‌‌ஷான்வி சங்கீத், பொங்கல் பானையில் வண்ணம் தீட்டுவதிலும், மாட்டுப் பொம்மையை அழகுபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

“என் மகளுக்குத் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுக்க இந்த நிகழ்ச்சி மிகவும் உதவியாக இருந்தது,” என்று இஷான்வியின் அப்பா திரு சங்கீத் கூறினார்.

சிறுவர்களுக்குப் பொங்கல் பற்றிய சிறப்புச் செய்முறை புத்தகமும் வழங்கப்பட்டது. அதை வைத்துச் சிறுவர்கள் பல நடவடிக்கைகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

நிலையத்தின் மூன்றாம் தளத்தில், அந்தக் காலத்தில் சிங்கப்பூரில் தமிழர்கள் வைத்திருந்த கடைகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் கண்காட்சி நடந்தது.

அதைப் பார்த்து ரசித்த சகோதரிகள் சம்யுக்தா, சஹானா, தங்களுக்குப் பிடித்தவற்றைப் பகிர்ந்துகொண்டனர்.

“எனக்குப் பொங்கல் பானையில் வண்ணம் தீட்டியதும், புள்ளிக் கோலம் போட்டதும், சாவிக்கொத்து செய்ததும் மிகவும் பிடித்திருந்தது,” என்றார் எட்டு வயது சம்யுக்தா.

மற்றொரு சிறுமியான ஒன்பது வயது ரித்திகா கூறும்போது, “எனக்கு ‘சந்திராஸ் உணவகம்’ மிகவும் பிடித்திருந்தது. அங்கே இருந்த மீ கோரிங், இந்திய ரோஜா, மீன் தலைக் கறி போன்ற சிங்கப்பூரின் உணவுகளைப் பார்க்க ஆசையாக இருந்தது. அதேபோல், ‘ஆனந்தம் பொற்சாலை’யில் தங்கம் அசல் போலவே மின்னியது. ஒவ்வொன்றையும் திறந்து பார்த்துக் கற்றுக்கொள்ளப் பிடித்திருந்தது,” என்றார்.

நிலையத்திற்கு வெளியே ‘மீடியாகார்ப்’ நடத்திய சிறப்புப் பொங்கல் நிகழ்ச்சியையும் சிறுவர்களும் பெற்றோர்களும் கண்டுகளித்தனர்.

குறிப்புச் சொற்கள்