வண்ணமயமான ஆடைகள், விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கைகள், அபிமான உணவுகள் சார்ந்த மிதவைகள் என கண்ணுக்கினிதாக மினுமினுத்தது மக்கள் கழகத்தின் இவ்வாண்டின் சிங்கே ஊர்வலம்.
‘மகிழ்ச்சி’ எனும் கருவிற்கு இணங்க, பிப்ரவரி 7, 8ஆம் தேதி இரவு நேரத்தில் நடந்த சிங்கே ஊர்வலம், காண்போர் அனைவரிடத்திலும் பேரின்பத்தை விதைத்தது.
இவ்வாண்டு சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவும் என்பதால் அதற்கேற்ப, சிங்கே ஊர்வலம் பிரம்மாண்டத்தில் ஒரு புதிய உச்சத்தை அடைந்தது.
4,000க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் ஆடல் பாடல்களுடன் சாதனையளவில் 23 மிதவைகள், 76 ‘அறைகள்’ கொண்ட நான்கு-மாடி மேடை என பல நவீன அம்சங்கள் இம்முறை இடம்பெற்றன.
இதுவே லாரன்ஸ் வோங் பிரதமராகப் பங்கேற்ற முதல் சிங்கே அணிவகுப்பு என்பது மற்றொரு சிறப்பு. அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகி, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேடையிலும் சுற்றத்திலும் சிறுவர்களின் படைப்புகள்
சிங்கேயில் முதன்முறையாக பல்லினங்களைச் சார்ந்த 60 தோலிசைக் கலைஞர்களும் ‘ஒன்’ (One) எனும் கருவில் மூன்று நிமிட இசைப்படைப்பை வழங்கினர். அவர்களில் ஆக இளையவர், ‘டமரு’ எனும் பறை இசைக்குழுவின் பத்து வயது சிறுவர்!
சிங்கே தேசியக் கல்வித் திட்டத்தின்வழி, எட்டு பள்ளிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘இன்பமிக்க கலைமுயற்சி’ எனும் தலைப்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு உணவுசார்ந்த கலைப்படைப்புகளை உருவாக்கினர்.
அப்படைப்புகள் ‘எஃப்1 பிட்’ கட்டடத்தின் வெளியேயிருந்த ‘பேஷன்ஆர்ட்ஸ்’ தெருவில் காட்சிப்படுத்தப்பட்டன. சிங்கேயைக் காணவந்த சிறுவர்களும் பல கைவினை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்கு சாவிக்கொத்தில் ஓவியந்தீட்டும் நடவடிக்கை மிகவும் பிடித்திருந்தது,” என்றார் மாணவர் ரிச்சித்.
“நாங்கள் இந்நிகழ்ச்சியைக் காண்பதும் இதுவே முதன்முறை. மிகவும் சுவாரசியமாக இருந்தது,” என்றார் மாணவி சாதனா.
“எனக்கு பையை அலங்கரிக்கும் நடவடிக்கை பிடித்திருந்தது,” என்றார் மாணவி நிரஞ்சனா.
“மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன; அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தின. உலக மக்கள் அனைவரும் பாராட்டக்கூடியதாக சிங்கே திகழ்கிறது,” என்றார் நார்த்லேண்ட் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சந்தோஷ்.
ஜனவரி 18ஆம் தேதி நடந்த சிங்கே தேசியக் கல்வி நிகழ்ச்சியில் 43 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 3,500க்கும் மேற்பட்ட சிறுவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
அழகழகான உணவுசார்ந்த மிதவைகள்
மக்கள் கழக மலாய்க் குழுவின் நாசி லெமாக் மிதவை, நற்பணிப் பேரவையின் இந்தியக் காலைச் சிற்றுண்டி (தோசை, இட்லி, வடை) மிதவை, ‘பாட்டியின் கறி’ மிதவை, சீனர்களின் ‘ஸ்டீம்போட்’ மிதவை போன்றவை ஒவ்வொன்றாக வந்து சிங்கப்பூரின் பல்லின உணவுப் பண்பாட்டை வெளிப்படுத்தின.
“நற்பணிப் பேரவையைப் பிரதிநிதித்து 160 நடனமணிகள் இன்று ஆடினார்கள். இதற்கு நாங்கள் மூன்று மாதங்கள் பயிற்சிகள் கொடுத்தோம். பல்வேறு வயதினர் - மாணவர்கள், இல்லத்தரசிகள், வேலைசெய்பவர்கள் - அனைவரும் சேர்ந்து சிறப்பாக நடத்தினர்.
“பல இன மக்களால் இணைந்து நடத்தப்படும் இக்கலை விழாவிற்கு ‘யுனெஸ்கோ’ (UNESCO) அங்கீகாரம் கிடைத்தால் சிங்கப்பூரின் கலாசாரம் மற்றும் இன நல்லிணக்கத்தின் சிறப்பான வாழ்க்கையை மேலும் மெருகூட்டும்,” என்றார் நற்பணிப் பேரவையின் படைப்பை ஒருங்கிணைத்த திருமதி சந்திரகலா.
சிறுவர்களே, நீங்கள் பார்த்தவரையில் உங்களுக்குப் பிடித்த மிதவைக்கும் கலைப்படைப்புக்கும் https://www.chingay.gov.sg/vote-cgfloat25, https://www.chingay.gov.sg/vote-commfloat25/, https://www.chingay.gov.sg/vote-pastreet25/ ஆகிய இணையத்தளங்களில் வாக்களிக்கலாம்.
சிங்கே ஊர்வலத்தை https://www.youtube.com/@ChingayParadeSG இணையத்தளத்திலும் மீண்டும் காணலாம்.
யுனெஸ்கோ பட்டியலுக்கு நியமனம் பற்றித் தெரியுமா?
வரும் மார்ச் மாதம், சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து சிங்கே ஊர்வலத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) மனிதநேயப் பண்பாட்டு மரபுப் பட்டியலுக்கு (UNESCO Representative List of the Intangible Cultural Heritage of Humanity) நியமிக்கவுள்ளன.
இந்த நியமனத்தை மக்களும் https://supportchingaysg.gov.sg இணையத்தளம்வழி ஆதரிக்கலாம்.
சீனாவில் இறைவழிபாட்டு ஊர்வலமாகத் தொடங்கி சிங்கப்பூர், ஜோகூர், பினாங்கு ஆகியவற்றுக்குப் பரவிய சிங்கே, இன்று சிங்கப்பூர், மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 4, 1973ல்தான் சிங்கப்பூரில் சிங்கே ஊர்வலம் முதன்முறையாக நடைபெற்றது.