கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

2 mins read
82746149-3743-41e6-b7e6-018c60023867
கரையோரப் பூந்தோட்டங்களில் இடம்பெற்றுள்ள 16 மீட்டர் உயரமுள்ள ‘கிறிஸ்துமஸ் பிரமிட்’. - படம்: கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்ட்

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகத் தீவெங்கும் பல்வேறு இடங்களில் அலங்காரங்களும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்ட் @ கரையோரப் பூந்தோட்டங்கள்

இவ்வாண்டுக் கொண்டாட்டங்களில் ஒளியூட்டு அலங்காரங்கள்.
இவ்வாண்டுக் கொண்டாட்டங்களில் ஒளியூட்டு அலங்காரங்கள். - படம்: கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்ட்

சிங்கப்பூரின் இந்த மிகப்பெரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒளிக் காட்சிகள், செயற்கைப் பனிப்பொழிவு, பல வேடிக்கை விளையாட்டுகளுடன் கூடிய ‘கார்னிவல்’ சவாரிகள், உணவு வகைகள் இடம்பெறவுள்ளன.

நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய இக்கொண்டாட்டங்கள் ஜனவரி 1 வரை நடைபெற இருக்கின்றன. இவை தினமும் மாலை 6.30 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நீடிக்கும்.

உலக கிறிஸ்துமஸ் சந்தை

உலக கிறிஸ்துமஸ் சந்தையின் ‘டுகெதர்லேண்ட்’ கொண்டாட்டங்கள்.
உலக கிறிஸ்துமஸ் சந்தையின் ‘டுகெதர்லேண்ட்’ கொண்டாட்டங்கள். - படம்: உலக கிறிஸ்துமஸ் சந்தை

ஒன்பது பிரிவுகள், நூற்றுக்கணக்கான கடைகள், வெவ்வேறு விதக் கொண்டாட்டங்கள் எனக் களைகட்டியுள்ளது உலக கிறிஸ்துமஸ் சந்தை.

சென்ற ஆண்டைவிட இருமடங்காக 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் பண்டிகைச் சந்தை, மாயஜால நிகழ்ச்சிகள், ‘கேண்டி லேன்’ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதன் சிறப்பம்சமாக ‘நட்சத்திர நுழைவாயில்’ எனும் கருப்பொருளில் அமைந்த இயக்கச் சிற்பங்களுடன் கூடிய மின்னும் ஒளிப்பாதை அமைந்துள்ளது. 1,500 கண்ணாடிப் பந்துகளால் அலங்கரிக்கப்பட்ட 8 மீட்டர் கிறிஸ்துமஸ் மரமும் இடம்பெற்றுள்ளது.

மரினா பேயில் அமைந்துள்ள இச்சந்தை, டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்து ஜனவரி 4ஆம் தேதிவரை இடம்பெறும். திங்கள் முதல் வியாழன் வரை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரையும் வெள்ளி முதல் ஞாயிறு வரை மாலை 4 மணியிலிருந்து இரவு 11 மணிவரையும் இடம்பெறும்.

கடைத்தொகுதிகளில் கொண்டாட்டங்கள்

தீவெங்கிலும் பல்வேறு கடைத்தொகுதிகளில் பலவகைக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

‘யுனைடெட் ஸ்குவேர்’ கடைத்தொகுதியில் ‘சீசன் ஆஃப் ஸ்பார்க்கில்ஸ்’ எனும் கருப்பொருளில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ‘செசெமே ஸ்திரீட்’ எனும் குழந்தைகளுக்கான பிரபல தொலைக்காட்சித் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வரும் அனுபவம் அங்கு கிடக்கும்.

சிட்டி ஸ்குவேர், ரிபப்ளிக் பிளாசா உள்ளிட்ட கடைத்தொகுதிகளில் ‘பாவ் பெட்ரோல்’ எனும் தொடரின் கருப்பொருளில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தி உட்லீ மால் கடைத்தொகுதியில், ‘பேபி ‌‌‌ஷார்க்’, ‘பிங்க் ஃபிராக்’ எனும் இரு அனிமேஷன் கதாபாத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்ட செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

நீ ஆன் சிட்டி, ‘‌‌ஷா ஹவுஸ் இரு இடங்களிலும் ‘கிரேட் கிறிஸ்துமஸ் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிறுவர்கள் குதித்து விளையாடும் ‘பவுண்சி கேசில்’, விளையாட்டுச் சவாரிகள், ‘ஃபெரிஸ் வீல்’ எனப்படும் ராட்டினம் ஆகியவற்றுடன் இவை களைகட்டியுள்ளன. இவை, ஜனவரி முதல் வாரம்வரை நடைபெறவுள்ளன.

குறிப்புச் சொற்கள்