தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் பனிப்பொழிவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

2 mins read
77d3eb1d-227d-4614-b667-dcc40d19cd5e
பனிப்பொழிவு போன்று கொட்டிய சோப்புக் குமிழிகளில் விளையாடி மகிழ்கிறார் இந்த சிறுவன். - படம்: ரவி சிங்காரம்

கிறிஸ்துமஸ் என்றாலே நம் சமூகப் பந்தங்களைப் புதுப்பித்து, வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது. 

ஒரு சமூகமாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது. 

இந்த நோக்கத்தில், டிசம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் குடியிருப்பாளர்களுக்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் என்றாலே பனிதான் பலரது நினைவுக்கு வரும்.  

சிங்கப்பூர் குளிர்ப் பிரதேசமாக இல்லாவிட்டாலும் இவ்வாண்டு சிறார்கள் பனித் துளிகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். 

சில நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியான பனிப்பொழிவு போன்ற சோப்பு நீர்க் குமிழிகளுடன் அவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஐரோப்பாவில் இருப்பது போன்ற உணர்வைப் பெற்றனர். 

இந்த தனித்துவமான கொண்டாட்டத்தில் மற்ற பல அங்கங்களும் இடம்பெற்றன. 

பத்திலிருந்து ஒன்றுவரை மக்கள் எண்ண, புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா, கிறிஸ்துமஸ் ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா சுற்றி வலம் வந்து, சிறார்களுக்கு மிட்டாய்கள் தந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

வில்வித்தையில் ஈடுபட்ட ஷோர்யா புட்டாடா, 6, முதன்முறையாக கிறிஸ்துமஸை சமூக மன்றத்தில் கொண்டாடினார். 

“நாங்கள் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவோம். வீட்டில் முன்பு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்திருந்தோம். பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இன்று மீண்டும் அந்த உணர்வு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் ஷோர்யாவின் தாயார் திவ்யானி.

19 மாதக் குழந்தையான இஷான்வி தாக்கர், தன் இரண்டாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடினார். அவருடைய தந்தை ஜனாக், “இன்றைய நிகழ்ச்சி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய மகிழ்ச்சியைக் கண்டு நாங்களும் மகிழ்ந்தோம்,” என்றார்.

5 வயது வைதேகி, நண்பகலில் கிறிஸ்துமஸ் தொப்பியைச் செய்யும் பயிலரங்கில் பங்குபெற்றார். தான் செய்த தொப்பியையே அவர் அணிந்து அழகிய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.  

3 வயது சிந்துமீனா, கையில் அழகிய வடிவங்களைப் பச்சைக்குத்திக்கொண்டார். கோல்ஃப் விளையாடினார். “அவருக்குப் பனியோடு விளையாட மிகவும் பிடித்திருந்தது,” என்றார் அவருடைய தாயார்.

குறிப்புச் சொற்கள்