கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே வண்ணமயமான ஆடைகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் நிறைந்த தருணங்களே நினைவுக்கு வரும்.
இவ்வாண்டும் சிங்கப்பூரின் பல தேவாலயங்களில் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினர்.
புக்கிட் தீமாவிலிருக்கும் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் வளாகத்தில், குடும்பத்தோடு இணைந்து கிறிஸ்துமஸை கொண்டாடினார் கேத்லீன் டி லோர், 39.
இவ்வாண்டு ஜனவரியில் பிறந்த தம் இரண்டாவது மகள் தான்விஷா தாலியாவுக்கு இதுவே முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
நான்கு வயது மகள் காவிஷா கேசியாவுக்கும் ஒரு வயதை எட்டவிருக்கும் தங்கைக்கும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிவித்து குடும்பமாகப் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
தேசிய நினைவுச் சின்னமான செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில், தங்கள் இரண்டரை வயது இரட்டையர்களோடு கிறிஸ்துமஸை கொண்டாடினர் பிரத்யுத் – சஞ்சாரி தம்பதி.
முதன்முறையாகச் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்திற்கு வருகை புரிந்த சஞ்சாரி முகர்ஜி, 32, “இங்குள்ள அமைதி தனிச்சிறப்புடையது. கூட்டுப் பிரார்த்தனையின் போது அதை நன்றாக உணர முடிந்தது,” என்றார்.
தங்கள் இரட்டையர்களுக்குக் கிறிஸ்துவின் கதையை எடுத்துரைத்து, அவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதே தங்களுக்கு மிகப்பெரிய ஆனந்தம் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, கிறிஸ்து சேகரத் திருச்சபையில் நடைபெற்ற பஞ்சாபி கிறிஸ்துமஸ் விழாவில், குழந்தைகளே விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் மேடையை அலங்கரித்தனர்.
அங்கு நடைபெற்ற பஞ்சாபி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் பாங்க்ரா, கிட்டா போன்ற பாரம்பரிய பஞ்சாபி நடனங்களும் வேதாகமத்தின் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களும் மேலும் சிறப்பு சேர்த்தன.
இவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, ஒன்பது குழந்தைகள் இணைந்து ஏழு நிமிடங்களுக்குக் கிறிஸ்துமஸ் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி பார்வையாளர்களின் பெரும் பாராட்டைப் பெற்றனர்.
இதில் ஐந்து வயது ஆன்யா கில், மூன்று வயது ஜோசஃப் அபிஷேக் அஜய் ஆகியோரும் அடங்குவர்.
வெவ்வேறு தேவாலயங்கள், வெவ்வேறு மரபுகள், வெவ்வேறு மொழிகள் என்றாலும், குழந்தைகளின் கண்களில் மிளிர்ந்த மகிழ்ச்சியும் குடும்பங்களுக்கிடையே பகிரப்பட்ட அன்பும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மேலும் அழகுச் சேர்த்தது.

