கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக ஆர்ச்சர்ட் வட்டார சாலைகளில் மக்கள் ஒன்றுதிரள்வது விழாவின் முதல் நாள் நடைபெறும்.
இவ்வாண்டும் மாபெரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மூன்றாவது முறையாக புதன்கிழமை (டிசம்பர் 24) இரவு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
அவ்வாட்டாரம் முழுவதையும் வண்ண விளக்குகள் வழிநெடுகே அலங்கரித்தன. பல கட்டடங்களுக்கு வெளியே சிறப்பு அலங்காரங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அவற்றின் அருகே மக்கள் சென்று காணொளிகளும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
பார்ப்போர் பலரும் ஒருவரை ஒருவர் ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்று வாழ்த்துபாடிச் சென்றனர். ஆர்ச்சர்ட் ரோட்டின் கொண்டாட்டங்களைக் காண வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் சிங்கப்பூரின் பல இன மக்கள் ஒன்றுகூடியுள்ளது பரவசத்தை ஊட்டியது.
மணமிகு உணவு வகைகளும் நாவைச் சுண்டியிழுக்கும் பல சுவைகளும் பசித்தோருக்கு ருசியூட்டின. சிறப்பு கலை நிகழ்ச்சிகள் அங்கு பல இடங்களில் நடந்தன.
மாயாஜால வித்தகர்கள், ஆள் உயர பொம்மை வடிவில் வேடமிட்டவர்கள் குழந்தைகளுக்கு பெருமகிழ்ச்சியூட்டினர். ஆடல், பாடல் என அப்பகுதியே மகிழ்ச்சி வெள்ளத்தில் நள்ளிரவையும் கடந்த திளைத்தது.
பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தங்களது கண்காணிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
மாலை 6 மணிக்கெல்லாம் மக்கள் ஆர்ச்சர்ட் சாலை அருகே உள்ள விஸ்மா அட்ரியா வளாகத்தின் வெளியே கூட ஆரம்பித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஐயன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி அருகே உள்ள பெட்டர்சன் ரோடு, பைட்ஃபோர்ட் ரோடு சாலைச் சந்திப்பு அருகே இருக்கும் நீஆன் சிட்டி ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட சாலையில் கொண்டாட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கின.
நள்ளிரவையும் கடந்த கொண்டாட்டங்கள் தொடரும் என்பதால் ஆர்ச்சர்ட் வட்டாரத்தைச் சுற்றியுள்ள பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.

