கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றாலே அது வேடிக்கை, விளையாட்டு, பரிசுகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் நட்பை வலுப்படுத்தவும் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடவும் வீட்டிற்குச் சிறுவர்களை வரவழைத்து அவர்களுக்குச் சிறு சிறு போட்டிகள் வைத்து, அனைவருக்கும் சிறிய அன்பளிப்புகளை வழங்கி மகிழலாம்.
கிறிஸ்துமஸ் தாத்தாவின் மூட்டை: ஒரு பெரிய பையில் பல பொருள்களைப் போட்டு, கண்களைக் கட்டிக்கொண்டு, அந்தப் பொருள்களைத் தொட்டுப் பார்த்து அவை என்னவென்று கண்டுபிடிக்கச் சொல்லலாம்.
நட்சத்திர வேட்டை: சிறிய நட்சத்திரங்களை வீட்டின் பல இடங்களில் மறைத்து வைத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் அதிக நட்சத்திரங்களைச் சேகரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் மியூசிக்கல் சேர்: ‘ஜிங்கிள் பெல்ஸ்’ (Jingle Bells) பாடலை ஒலிக்கவிட்டு இந்தப் போட்டியை நடத்தலாம்.
வாழ்த்து அட்டை தயாரித்தல்: வண்ணக் காகிதங்கள், மினுமினுப்புகள் ஆகியவற்றைக் கொடுத்துச் சிறுவர்களைத் தாங்களாகவே வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கச் சொல்லலாம்.
முகமூடி தயாரித்தல்: கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது கலைமான் (Reindeer) போன்ற முகமூடிகளைச் செய்யச் சொல்லலாம்.
ஆடை அலங்கார அணிவகுப்பு: தேவதைகள், இடையர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற வேடமிட்டு வரச் சொல்லலாம்.
குழுப்பாடல்: எளிமையான கிறிஸ்துமஸ் பாடல்களைச் சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து பாட வைக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
கதை சொல்லுதல்: கிறிஸ்துமஸ் உருவான கதை அல்லது கிறிஸ்துமஸ் தாத்தாவின் கதையை, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் அமர்ந்து சொல்லலாம்.
கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் ஒரு புகைப்படம்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட ஒருவருடன் சிறுவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், அவரிடமிருந்து சிறிய பரிசுகளைப் பெறவும் ஏற்பாடு செய்யலாம்.
விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி, பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்குவது அவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் வைத்திருக்கும்.

