சிறுவர்களின் சிரிப்புக் குரல்கள் எங்கும் ஒலிக்க சுவா சூ காங் வட்டாரத்தில் சிறுவர் விளையாட்டு தினம் ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமையன்று விமரிசையாக நடைபெற்றது.
தி அரீனா @ கியட் ஹோங்கின் அருகேயுள்ள கூடாரத்தில் நடைபெற்ற விளையாட்டுகளில் ஏறக்குறைய 100 பாலர்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க, பெற்றோரும் ஆசிரியர்களும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
சிறுவர்களின் விளையாட்டுகளைக் காண துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், சுவா சூ காங் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களும் சிறுவர்களுடன் விளையாட்டுகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
புதிர் அங்கங்களுடன் ஓட்டப்பந்தயம், ‘ஹூலா ஹூப்’, பந்துகளை நகர்த்தும் மனிதச் சங்கிலி ஆகிய விளையாட்டுகளும் இடம்பெற்றன.
கலந்துகொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
“எனக்கு ஹூலா ஹூப் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. நான் புதிரையும் வேகமாக முடித்து என் அணி வெற்றிபெறுவதற்கு உதவினேன்,” என்றார் கியட் ஹோங் புளோக் 295 பிசிஎஃப் ஸ்பார்கல்டாட்ஸ் பாலர்பள்ளி மாணவி காவியசேனா, 6.
காவியசேனாவுக்கு அன்று மற்றொரு முக்கியப் பொறுப்பும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு தினத்தையொட்டி பக்கத்திலேயே நடைபெற்ற சுவா சூ காங் நகர மன்ற ஐந்தாண்டு பெருந்திட்ட அறிமுக நிகழ்ச்சியில் காவியசேனா கியட் ஹொங்கில் வரவுள்ள புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்த உதவினார்.
கியட் ஹோங் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னெய்ன் அப்துல் ரஹீம் அவரிடம் சில கேள்விகள் கேட்டார். தி அரீனா @ கியட் ஹொங்கிலுள்ள ‘மெகாபிலேகிரவுண்ட்’ எனும் பெரிய விளையாட்டுதிடல் தனக்குப் பிடிக்கும் என்றார் காவியசேனா.
“காவியா, நீ வளர்ந்ததும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு எளிதில் செல்லலாம். காரணம், சுவா சூ காங்கில் ஆறு புதிய பெருவிரைவு ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன,” என்றார் திரு ஸுல்கர்னெய்ன்.
வகுப்பில் காவியசேனா ஈடுபாடுடன் கலந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் பேசுவதால் அவர் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எப்படிப் பேசுவது என்பதற்கென அவருடைய ஆசிரியர்கள் அவருக்குப் பயிற்சியும் வழங்கினர்.
அவரைப் போல் இன்னும் நான்கு மாணவர்களும் ஐந்தாண்டுப் பெருந்திட்ட அறிமுகத்தில் பங்கு வகித்தனர்.
“இங்குள்ள சிறுவர்களின் எதிர்காலத்துக்காகத்தான் இந்த பெருந்திட்டத்தை நாம் அறிமுகப்படுத்துகிறோம். அதனால் அவர்களுடனே இன்று நாங்கள் அதைப் பற்றிப் பகிர்கிறோம்,” என்றார் துணைப் பிரதமர் கான் கிம் யோங்.
அதே நாள் நடைபெற்ற ஜூரோங்-கிளமெண்டி ஐந்தாண்டுப் பெருந்திட்ட அறிமுக விழாவிலும் சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாவடிகள் இடம்பெற்றன.