தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் முகிலன் படித்து வந்தான். அன்றைய தினம் அவன் வகுப்பில் அன்பு என்றொரு மாணவன் புதிதாகச் சேர்ந்தான். அவனுடைய குடும்பம் தெம்பனிஸ் பகுதியில் புதிதாகக் குடியேறியிருந்தது.
இதுவரை அன்பு ஜூரோங்கில் படித்து வந்தான். இந்தப் பள்ளியில் அவனுக்கு யாரையும் தெரியாது. அதனால் தயக்கத்துடன் முதல்நாள் பள்ளிக்குச் சென்றான்.
அன்றைய தினம் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு ஓர் ஓவியத்தைக் கொடுத்து, “அனைவரும் இந்த ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுங்கள்,” என்று கூறினார்.
அனைத்து மாணவர்களும் வண்ணம் தீட்டத் தொடங்கினார்கள்.
ஆனால், அன்பு மட்டும் எதுவும் வரையாமல் சோகமாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அவனிடம் வண்ணம் தீட்டப் பென்சில்கள் இல்லை. அவனது கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. அதைப் பார்த்த முகிலனுக்கு மிகவும் கவலையாகிவிட்டது.
உடனே முகிலன் அவன் அருகில் சென்று அமர்ந்து, “அன்பு, ஏன் கவலையாக இருக்கிறாய்? இந்தா, என் வண்ணப் பென்சில்களை நீயும் பயன்படுத்திக்கொள். நாம் இருவரும் சேர்ந்தே நமது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டலாம்,” என்று கூறி, தன்னிடம் இருந்த பென்சில்களை அவனுக்குக் கொடுத்தான்.
அன்புவின் முகம் மலர்ந்தது. “மிக்க நன்றி முகிலா!” என்று கூறி மகிழ்ச்சியுடன் வண்ணம் தீட்டத் தொடங்கினான்.
நடந்தவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர், முகிலனை அருகில் அழைத்தார்.
“மாணவர்களே, தன்னிடம் பென்சில் இல்லாததால் வருத்தப்பட்ட நண்பனுக்கு, முகிலன் தன்னிடம் இருந்ததைப் பகிர்ந்து கொடுத்து உதவினான். இதையே ஔவை பாட்டி தனது ஆத்திசூடியில் ‘ஒப்புரவு ஒழுகு’ என்று கூறியுள்ளார்,” என்று விளக்கினார்.
வகுப்பிலிருந்த அனைவரும் முகிலனுக்காகக் கைதட்டிப் பாராட்டினார்கள். அன்று முதல் முகிலனும் அன்புவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
நீதி: பிறர் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, நம்மால் முடிந்த உதவியைச் செய்து அனைவரோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
1. கோடிட்ட இடங்களை நிரப்புக
Q1. அன்புவின் குடும்பம் _________ பகுதியில் புதிதாகக் குடியேறியிருந்தது.
Q2. அன்பு இதற்கு முன்பு _________ பகுதியில் படித்து வந்தான்.
Q3. ஔவை பாட்டி தனது ஆத்திசூடியில் ‘_________’ என்று கூறியுள்ளார்.
2. சரியா? தவறா? எனக் குறிப்பிடுக:
Q4. முகிலனும் அன்பும் தொடக்கநிலை ஐந்தில் படித்து வந்தனர். [ ______ ]
Q5. அன்புவிடம் வண்ணம் தீட்ட பென்சில்கள் இருந்தன. [ ______ ]
Q6. முகிலன் தன்னிடம் இருந்த பென்சில்களை அன்புவுடன் பகிர்ந்துகொண்டான். [ ______ ]
Q7. முகிலனின் நற்செயலை ஆசிரியர் பாராட்டினார். [ ______ ]
3. ஓரிரு வரிகளில் விடையளி:
Q8. அன்பு ஏன் தயக்கத்துடன் பள்ளிக்குச் சென்றான்?
Q9. அன்பு ஏன் சோகமாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்?
Q10. முகிலன் தன் பென்சில்களைக் கொடுத்துவிட்டு அன்புவிடம் என்ன கூறினான்?
Q11. முகிலனின் செயலைக் கண்ட ஆசிரியர் எந்த ஆத்திசூடியைக் கூறினார்?
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு ஏற்ற எதிர்ச்சொல்லை எழுதுக.
Q12. புதிதாக x
Q13. சோகம் x
Q14. கவலை x
Q15. கொடுத்தான் x
Q16. மலர்ந்தது x
Q17. நண்பன் x
Q18. தயக்கம் x
விடைகள்:
Q1. தெம்பனிஸ்
Q2. ஜூரோங்
Q3. ஒப்புரவு ஒழுகு
Q4. தவறு
Q5. தவறு
Q6. சரி
Q7. சரி
Q8. புதிய பள்ளியில் தனக்கு யாரையும் தெரியாது என்பதால் அன்பு தயக்கத்துடன் பள்ளிக்குச் சென்றான்.
Q9.தன்னிடம் வண்ணம் தீட்ட பென்சில்கள் இல்லாததால் அன்பு சோகமாக உட்கார்ந்திருந்தான்.
Q10.தன் பென்சில்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இருவரும் சேர்ந்தே வண்ணம் தீட்டலாம் என்றும் முகிலன் கூறினான்.
Q11.ஆசிரியர் ‘ஒப்புரவு ஒழுகு’ என்ற ஆத்திசூடியைக் கூறினார்.
Q12. பழையதாக
Q13. மகிழ்ச்சி
Q14. களிப்பு
Q15. பெற்றான்
Q16. வாடியது
Q17. பகைவன்
Q18. துணிவு

