பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியில் ‘காமிக்ஸ்’ எனப்படும் சித்திரப் படங்கள் கொண்ட புத்தகங்கள், கணினி சார்ந்த விளையாட்டு நூல்கள், வரைகலை புத்தகங்கள் ஆகியவற்றுக்காகப் புதிதாக நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 7,000 புத்தகங்கள் கொண்ட அந்த நூலகம் புதன்கிழமை (ஏப்ரல் 30) திறக்கப்பட்டது.
இந்தப் புதிய நூலகம் ஓராண்டு செயல்படும் என்றும் இது முழுக்க முழுக்க சுய சேவை நிலையமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நூலகத்தைத் தேசிய நூலக வாரியம், ஜேடிசி (JTC) நிறுவனம் மற்றும் உள்ளூர் விளையாட்டு நிறுவனமான ஓரிகேம் (Origame) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
தேசிய நூலக வாரியத்திற்குக் கீழ் செயல்படும் நூலகங்களில் பலகை விளையாட்டுகள் இருக்கும் முதல் நூலகமாக இது விளங்குகிறது.
மேலும் இந்தப் புதிய நூலகம் வித்தியாசமாகவும் சாகசங்களைச் சொல்லும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அங்குள்ள பலகை விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் உள்ளன.
சிங்கப்பூரர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பல நடவடிக்கைகளைத் தேசிய நூலக வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கையில் இதுவும் ஒன்றாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இதுபோன்ற திடீர் சிறு நூலகங்களுக்கு வாசிப்பாளர்கள் நல்ல வரவேற்பு வழங்கியுள்ளனர். கடைத்தொகுதிகள், சமூக மன்றங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இவை உள்ளன. இதனால் புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது,” என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்தது.
மேலும், இதன்மூலம் பல தரப்பு பங்காளிகளுடன் வேலை செய்யும் வாய்ப்பும் வாசகர்கள் விரும்பி வாசிப்பதையும் தெரிந்துகொள்ள முடிவதாகத் தேசிய நூலக வாரியம் கூறியது.

