அன்றாட வாழ்வில் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போட்டிகள்

அன்றாட வாழ்வில் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போட்டிகள்

2 mins read
6120b26c-99a8-4cf7-b041-131893563d04
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

மாணவர்களுக்குத் தமிழ் மொழியின்மேல் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தும் வகையில் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகளைக் கடந்த மார்ச் 14ஆம் தேதி, சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் நடத்தியது.

சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம், வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு, ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மொழி விழா நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு பாலர் பள்ளி மாணவர்களுக்குப் பொருள் காட்டிப் பேசுதல் எனும் தலைப்பில் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் பாலர் பள்ளி மாணவர்கள் தமிழ்ப் புத்தகங்கள், தலைவர்கள், தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை மேடையில் காட்டி அதுபற்றித் தங்கள் மழலைத் தமிழில் பேசியது பார்வையாளர்களை ஈர்த்தது.

தொடக்கநிலை 1, 2 மாணவர்கள் பழமொழி, திருக்குறள் ஆகியவற்றை விளக்கி, அதனையொட்டிய கதைகளைக் கூறி அந்தக் கதையின் நீதியை இறுதியில் உரைத்தனர்.

தொடக்கநிலை 3, 4 மாணவர்கள் தமிழ் மொழி சார்ந்த பல்வேறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து உரையாற்றினர்.

இப்போட்டிகளில் மொத்தம் 180 மாணவர்கள் பங்கேற்றனர்.

பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ள தமிழ் மொழி விழா நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டிகள் அன்றாட வாழ்வில் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஊக்குவித்து, தலைமுறைகளுக்கிடையிலான உரையாடலை வளர்ப்பதுடன் இளையர்களிடையே தமிழ் மொழி குறித்த பெருமையையும் நம்பிக்கையையும் விதைக்கவும் வழிவகுக்கிறது என்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

குறிப்புச் சொற்கள்