பிறந்தநாள் வாழ்த்து......
சீர்மிகு சிங்கையே! ஒற்றுமையின் உறைவிடமென்றால் உலகிலேயே உன் இடம்தான். இலக்குகளோ இமயம் தொடும், இம்மண்ணில் வாழ மனம்மகிழ்கின்றேன்! வாழ்க சிங்கப்பூர்........ வளர்க சிங்கப்பூர்....
ஶ்ரீதர் ஶ்ரீநாத், உயர்நிலை மூன்று விரைவு, ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
சிங்கப்பூர்,
அமைதி பூக்கும் அரங்கமிது,
அறிவால் மிளிரும் சுரங்கமிது,
உழைப்பால் உயர்ந்த உன்னதம்
உலகிற்கே தரும் உயர்ந்த கண்ணோட்டம்!
வலுப்படுத்துவது வளரும் நம் எதிர்கால சந்ததியினரிடம்
வாழ்க சிங்கப்பூர்!
செந்தில்குமார் மிதுன் மித்ரன், உயர்நிலை மூன்று விரைவு, ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
நான் கலந்துகொண்ட தேசிய தினக் கொண்டாட்டம்
தேசிய தினக் கொண்டாடத்தை நாங்கள் குதூகலமாக கொண்டாடினோம். அங்கு நாங்கள் ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைத்த அணிவகுப்பை கண்டு மகிழ்த்தோம். ராணுவ விமானங்கள் எங்களுக்கு அருகில் செல்வது போல் இருந்தது. அவைகளின் சத்தம் எங்களின் காதுகளைப் பிளந்தது. அதுமட்டுமின்றி “டும் டும் டும்” என்னும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. அங்கு சாப்பிட சில நொறுக்குத் தீனிகளையும் கொடுத்தார்கள். இறுதியில் வாணவேடிக்கை வெடித்த பின் நாங்கள் தேசிய கீதத்தைப் பாடினோம்.மேலும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம்.
ஸ்ரீ கிருஷ்ணன் (தொடக்கநிலை 5) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
சிங்கப்பூரின் அறுபதாவது தேசிய தினக் கொண்டாடத்தைக் காண எங்களின் பள்ளி தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பாடங்கிற்கு அழைத்துச் சென்றது.
தேசிய தின விழாவில் தேசிய பாடல்கள் ஒலித்த பின் தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றது. நான் முதல்முறையாக நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தேன்.
அதன்பிறகு நடைபெற்ற விமான படையின் சாகசங்கள் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது.
மேடையில் நடைபெற்ற நடனத்திற்கு ஏற்றாற்போல் எனக்கு வழங்கப்பட்ட கை விளக்குகளின் வண்ணங்கள் மாறின. அதைக் காண்பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாம் நண்பர்களுடன் சேர்ந்து சிற்றுண்டிகளையும் குளிர்பானங்களையும் ருசித்துக் கொண்டே மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தோம். நிகழ்ச்சி தேசியப் பாடலுடன் முடிவுக்கு வந்தது. இந்த நாள் எனக்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது.
மதனா (தொடக்கநிலை 5) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
எனக்கு தேசிய தினக் கொண்டாட்டம் மிகவும் பிடித்திருந்தது. நாம் பாடங்கிற்குச் சென்றவுடன் முதலில் மிகவும் சூடாக இருந்தது. அதனால், நாம் விசிறியை வைத்து விசிறிக்கொண்டிருந்தோம். ஆனால் நிகழ்ச்சி தொடங்கியவுடன் அந்த இடமே உற்சாகத்தில் களைகட்டியது. மக்கள் பலரும் சிவப்பு வெள்ளை ஆடையை அணிந்திருந்தனர். நானும் என் நண்பர்களும் மகிழ்ச்சியாக இருந்தோம். நான் என் நாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன்.
அணன்யா (தொடக்கநிலை 5) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
தேசிய தினக் கொண்டாட்டம் குதூகலமாக இருந்தது. அது விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டம் பாடங்கில் நடைபெற்றது. தேசிய தினக் கொண்டாட்டத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன். தேசிய தினக் கொண்டாட்டத்தில் வித விதமான இராணுவ வாகனங்கள் இருந்தன. நிறைய வாணவேடிக்கைகளும் நடன நிகழ்ச்சிகளும் இருந்தன. எனக்குப் பிடித்தது பாடலுடன் பாடும் அங்கம். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பாடும்பொழுது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. அது எனக்கு ஒரு புது விதமான அனுபவமாக அமைந்தது. நான் அந்த நாளை என்றைக்குமே மறக்கமாட்டேன்.
டாணுஸ்யா ( தொடக்கநிலை 5) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
இந்த ஆண்டு சிங்கப்பூர் தனது 60வது தேசிய தினத்தை ஆகஸ்ட் 9 அன்று மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாட இருக்கிறது. மாஜூலா சிங்கப்பூர் என்ற கருப்பொருளின்கீழ் கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்புச் சிங்கப்பூரின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான பாடாங் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் பிரமாண்டமான விழாவில் ராணுவ அணிவகுப்பு வான்வழிச் சாகசங்கள் மற்றும் கண்கவர் வாணவேடிக்கைகள் இடம்பெறும். மேலும், கலை நிகழ்ச்சிகளும் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளும் உண்டு. நாட்டின் இந்தப் பொன்விழாவை அனைத்துச் சிங்கப்பூரர்களும் கொண்டாடி மகிழும் தருணம் இதுவாகும்.
அமிர்தலிங்கம் சிலம்பரசி ஆதிரை (தொடக்கநிலை 4) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற நாளான ஆகஸ்டு 9 சிங்கப்பூரின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தன்று நாடு முழுவதும் கொடி ஏற்றம், அணிவகுப்பு, கலாசார நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் என்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். இந்த நாளானது சிங்கப்பூரின் வளர்ச்சியையும் ஒற்றுமையையும் மக்களின் கடுமையான உழைப்பையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைகிறது. இன்றைய மாணவர்களாகிய நாமும் நல்ல குடிமக்களாக திகழ்ந்து சிங்கப்பூரின் எதிர்காலத்தை உயர்த்துவோமாக.
கெவின் (தொடக்கநிலை 4) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
பறவை ஒன்று, சுதந்திரமாகப் பறக்க ஆரம்பித்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறதே!!!
“சிங்கப்பூர் தேசிய தினம் ஒரு தேசத்தின் பெருமை”
சிங்கப்பூர் தனது தேசிய தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கொண்டாடுகிறது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவெடுத்தது.
இந்நாள் சிங்கப்பூரர்களுக்குச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் நாட்டின் வளர்ச்சியின் நினைவையும் கொண்டு வருகிறது. தேசிய கொடி பறக்கப் பாடல்களும் அணிவகுப்பும் நடக்கும்.
முக்கியமாகத் தேசிய தின அணிவகுப்பானது மக்கள் உற்சாகத்துடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாகும்.
இன்றைய சிங்கப்பூர் உலகின் முன்னணி நாடாக மாறியுள்ளது. கல்வி, சுகாதாரம், தொழிற்நுட்பம், வீட்டுரிமை, வாழ்க்கை தரம் என்று பலவற்றில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தத் தேசிய தினத்தன்று நாம் அனைவரும் ஓரணியாக நின்று நாட்டை மேம்படுத்துவோம் என்று உறுதிகொள்வோம்.
ஸ்ரீனிவாசன் ரக் ஷன் சாய் (தொடக்கநிலை 4) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
இளவரசர் நீலக் கடல் கடந்து வந்தார். ஒரு பெரிய மரம் நின்ற தீவைக் கண்டார். கம்பீர விலங்கொன்றைக் கண்டு வியந்து “சிங்கப்பூரா, சிங்கத்தின் பூமி” எனப் பெயரிட்டார். அனைவரும் பெருமைகொள்ளும் ஒரு நாடு நம் நாடு.
முஹம்மது ஸய்ட் (தொடக்கநிலை 4) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
சிங்கப்பூர் ஒரு சிறிய அழகிய தீவு. அது சிறிய தீவு என்றாலும பல இனங்கள் ஒன்றாக வாழும் சிங்காரச் சிங்கை. சிங்கப்பூரர்கள் மற்ற இனங்களையும் கலாசாரத்தையும் மதித்து ஒற்றுமை உணர்வோடு வாழ்கின்றனர். இது சிங்கையின் தனித்துவம் என்றால் மிகையாகாது இவ்வாண்டு சிங்கை தனது 60வது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. இந்த 60 ஆண்டுகளில் நாடு அமோக வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாம் அனைவரும் பெருமையுடன் கொண்டாடி இன்புறலாம்.
தனுஷியா உமாசங்கர் (தொடக்கநிலை 4) செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
சிங்கப்பூர் பற்றிய எனது விருப்பம்
என் சிங்கப்பூர்; குடிமக்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடனும் பசுமை செழித்தோங்கிய நாடாக விளங்கவேண்டும்.
என் சிங்கப்பூர்; மக்களிடைய சமூகப் பிணைப்பை வலுப்படுத்தி அமைதி, செழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து மேம்பாடு கண்டு வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என் சிங்கப்பூர்!
கரினா பேகம் தொடக்கநிலை 3 செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்! சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூரில் சீனம், மலாய், தமிழ், ஆங்கிலம் என்ற நான்கு அதிகார மொழிகளைக் கொண்டுள்ளது. பல இன மக்களை ஒன்று சேர்த்து வாழ வைக்கும் ஒர் அழகான பசுமை நகரம். எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் சிங்கப்பூரில் கண்கவர் இடங்கள், அண்ணார்ந்து பார்க்க வைக்கும் கட்டடங்கள் உள்ளன. மக்கள் வாழ்வதற்கும் ஒரு சிறந்த நாடு என்றால் அது மிகையாகாது!
ஃபலிஷா தொடக்கநிலை 3செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
சேர்ந்து கொண்டாடுவோம்! சிங்கப்பூருக்கு நாம் மரியாதை கொடுப்போம்! பல போராட்டங்களைத் தாண்டினோம்! ஒன்றாக நிற்போம்! எல்லாரும் சேர்ந்து நம் நாட்டின் அறுபதாம் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுவோம்!
அக்ஷரா தொடக்கநிலை 3 செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
சிங்கப்பூர்... அமைதி நிறைந்த நாடு! உலகம் போற்றும் நாடு! ஏற்றம் கண்ட நாடு! கற்றலில் சிறந்த நாடு! மனிதநேயம் நிறைந்த நாடு! முன்மாதிரியாகத் திகழும் நாடு! பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடு!
க கார்த்திக் தொடக்கநிலை 3 செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
இவ்வாண்டு SG60 கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அது மட்டுமில்லாமல் இவ்வாண்டு என் பள்ளியில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் முதல்முறையாக நேரடியாக பார்த்த தேசிய தினக் கொண்டாட்டம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை ஆண்டுகளாக நான் தொலைக்காட்சியில்தான் தேசிய தினக் கொண்டாட்டத்தைப் பார்த்திருக்கிறேன். இதுதான் முதல்முறை நேரடியாக பார்ப்பது.
நான் மார்சிலிங்கில் வசிக்கிறேன். அங்கு தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக தேசியக்கொடியை சுமந்து விமானம் பறப்பதைப் பார்ப்பேன்.
கொண்டாட்டத்தில் எனக்கு நடன நிகழ்ச்சி மிகவும் பிடித்து இருந்தது. பலர் ஒன்றிணைந்து நடனமாடியதைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அவ்வளவு அழகாக இருந்தது.
தேசிய தினத்தன்று நான் சிவப்பு, வெள்ளை நிறம் கொண்ட ஆடையை உடுத்தி வெளியே செல்வேன். என் வீட்டு சன்னலிலும் தேசியக் கொடியைக் கட்டி இருக்கிறேன். வாழ்க சிங்கப்பூர்!
ரக்ஷணாஸ்ரீ மோகனகலையரசன், டாமாய் தொடக்கப்பள்ளி (படம்)