பொங்கல் 4 நாள்களுக்கு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். மாட்டு பொங்கல் என்று அழைக்கப்படும் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளன்று, மாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
விவசாயத்தின் உயிர்நாடியாக திகழும் பசுக்கள், நிலத்தை உழுது மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பாலைத் தருகின்றன. அன்றைய தினம் தமிழர்கள் மாடுகளுக்கு தங்களது நன்றியை தெரிவிப்பார்கள்.
லிம் சு காங்கில் இருக்கும் விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து ஒரு காளை, இரண்டு பசுக்கள், இரண்டு கன்றுகள் - இந்திய மரபுடைமை நிலையத்திற்கு எதிர்ப்புறத்திலுள்ள ‘பொலி’ கூடாரத்தில், ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வேலிக்கு பின்னால் வைக்கப்பட்டிருக்கும் இந்த மாடுகளை, மக்கள் வரையறுக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து பார்க்கலாம்.
லிஷா குழுமம் இந்த மாடுகளை பொங்கல் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக லிட்டில் இந்தியாவுக்கு வரவழைத்தது. இதன்வழியாக சிறுவர்களும் மாணவர்களும் பொங்கல் கொண்டாட்டத்தில் மாடுகள் வகிக்கும் முக்கிய பங்கை பற்றி அறிந்துகொண்டனர்.
மாலை 5.45 மணி அளவில், பொலி கிளைவ் வீதியில் இருந்த மாடுகள் ஹேஸ்டிங்ஸ் ரோடு, கேம்பல் லேன் ஆகிய சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன.
இந்த ஊர்வலத்தை நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மேள தாளத்துடன் வழி நடத்தினர். கலைஞர்கள் பொய்க்கால் நடனம், மயிலாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களை ஆடி, மாடுகளை வரவேற்று அழைத்துச் சென்றனர். இன்னிசையும், மாடுகளின் கம்பீரமான நடையும் பார்வையாளர்கள் பலரை கவர்ந்திழுத்தது.
தொடர்புடைய செய்திகள்
கேம்பல் லேனில், மக்கள் பலரும் பக்தி பரவசத்துடன் மாடுகளுக்கு பூ மாலைகள் அணிவித்து, வாழைப்பழங்களை ஊட்டி விட்டனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் கைப்பேசிகளில் மாடுகளுடன் நின்று படம் எடுத்து இந்த தருணங்களை நினைவுகளாக பதிவு செய்தனர்.
மேலும் மக்கள் பசுக்களின் நெற்றியில் குங்குமம் இட்டு, மஞ்சள் மற்றும் சந்தனம் பூசி அலங்கரித்து, மாடுகளை வரவேற்றது மங்களகரமாக இருந்தது.