தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கதக்’ சிறுவர் நடனமணிகளின் கண்ணுக்கினிய நடனம்

2 mins read
f6495cc4-08c1-410d-965c-872abc428f0c
‘தாத்வா புரொடக்‌‌ஷன்ஸ்’ சிறுவர் நடனமணிகளுடன் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனராத் திசநாயக, சிறப்பு விருந்தினர்கள், குரு நாட்டா‌‌‌ஷா சிங் டேஜுஜா. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

தீபாவளியின்போது இந்தியக் கலைகளைக் கற்றுவரும் மாணவர்கள், தாம் கற்றதை நினைவுகூர்வதோடு தம் ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவதும் வழிவழியாகப் பின்பற்றப்படும் ஒன்று.

இதற்கேற்ப, கதக் நடனம் கற்றுவரும் ஏறக்குறைய 15 சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 முதல் 6 வரை ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில், தம் குரு நாட்டாஷா சிங் டேஜுஜாவுடன் ஒரு நடன நிகழ்ச்சி படைத்தனர்.

சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனராத் திசநாயக, இலங்கைத் தூதரகத்திலிருந்து அமைச்சர் (வர்த்தகம்) யசோதா யடேஹி மற்றும் அமைச்சர் அஹ்மட் றாசி (Head of Chancery), லி‌‌‌ஷா ஆலோசகர் ஜாய்ஸ் கிங்ஸ்லி ஆகியோர் நிகழ்ச்சியைக் காண சிறப்பு வருகையளித்திருந்தனர்.

“அனைத்தையும் கடந்துவந்தவர்’ என்ற தலைப்பில் நடனம் அமைந்தது. 

எவ்வாறு பல இந்தியக் கலைவடிவங்களும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றனவோ, அவ்வாறே கதக் நடனமும் முக பாவனைகள், கைகால் அசைவுகள்மூலம் புராணக் கதைகளைச் சொல்கிறது.

அவ்வகையில், சிறுமிகளின் நடனம் கிருஷ்ணரின் பண்புகள், நிகழ்வுகளை மேடையேற்றின.

நடனங்களுடன், மற்ற கலைப்பள்ளிகள் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கின.

“கை, கால்களைப் பயன்படுத்துவதால் கதக் நடனம் உடற்பயிற்சி போன்று உள்ளது,” என்றார் கரிசா டேஜுஜா, 9.

“என் தோழி கதக் கற்றதைக் கண்டு எனக்கும் அதில் நாட்டம் வந்தது,” என்றார் ஈரா சூத், 7.

“எங்கள் பள்ளியில் இணைப்பாட நடவடிக்கையாக கதக் இருப்பதால் அதைக் கற்கத் தொடங்கினோம்,” என்றனர் வைஸ் ஓக்ஸ் அனைத்துலகப் பள்ளி மாணவர்கள் ‌ஷேத்ரன மூலா, 9, மற்றும் ஸ்வப்னிதா சிங், 9.

சலங்கை ஒலி சத்தம் பிடித்திருந்ததால் நடனமாடத் தொடங்கியதாகவும் கூறினார் 6 வயது சோயா சடிகோட்.

குறிப்புச் சொற்கள்