காட்டில் குதிரை தனியாக வாழ்ந்துகொண்டு இருந்தது. அது புல் மேயும் இடத்தில் இருந்த பொந்தில் ஓர் எலி வாழ்ந்து வந்தது. இரண்டும் அடிக்கடி சந்தித்துப் பேசி நண்பர்கள் ஆனார்கள்.
ஆனால், எலி எப்போதும் தன்னைப்பற்றி பெருமை பேசிக்கொண்டே இருக்கும். “என்னை வெல்ல யாரும் கிடையாது; நான் அறிவில் உயர்ந்தவன்; பலம் கொண்டவன்; மண்ணையே துளையிட்டு அதற்குள் வீடு கட்டுவேன்,” என்று ஆணவத்துடன் பேசிக்கொண்டே இருக்கும்.
ஒருநாள் குதிரை எலியிடம், “நண்பா! நான் சிறிது தூரத்தில் இருக்கும் இடத்திற்கு மேயப் போகிறேன்,” என்று கூறியது.
அதைக்கேட்ட எலி தானும் வருவதாகக் கூறி குதிரையுடன் சென்றது. வழியிலும் தன்னைப்பற்றி கர்வத்துடன் பேசிக்கொண்டே சென்றது. குதிரையும் எதுவும் பேசாமல் அது பேசுவதைக் கேட்டுக்கொண்டே சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று எலியிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. குதிரை என்ன ஆனது என்று திரும்பிப் பார்த்தது.
அப்போது எலி, “நண்பா! அங்கே பார்! பெரிய ஆறு ஓடுகிறது. நான் உருவத்தில் சிறியவன். நான் அதில் இறங்கினால் இறந்துவிடுவேன்,” என்றது.
அதைக்கேட்ட குதிரை, “நண்பா! அந்தத் தண்ணீர் என் கால் முட்டியளவில்தான் இருக்கிறது. வேண்டுமானால் நீ என் முதுகில் ஏறிக்கொள். நான் உன்னை அந்தப் பக்கம் விடுகிறேன்,” என்று கூறி எலியை முதுகில் சுமந்துகொண்டு கால்வாயைக் கடந்தது.
அப்போதுதான் எலி தன்னுடைய தவறைத் தெரிந்துகொண்டது. தான் எப்போதும் பெருமை பேசும்போது அடக்கத்துடன் அதைக் கேட்டுக்கொண்டு குதிரை எதுவும் பேசாமல் இருந்ததை உணர்ந்த எலி குதிரையிடம் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டது. அன்றுமுதல் எலி தன் கர்வத்தை மறந்து எப்போதும் குதிரையுடன் நெருங்கிப் பழகியது.
நீதி: தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பெருமை பேசக்கூடாது. எதிரில் இருப்பவர்களுக்கும் பல திறமைகள் இருக்கும் என்பதை உணர்ந்து பழகவேண்டும்.