தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாய்ப்பை நழுவ விடாதே!

2 mins read
55869b84-0a4c-4f2c-84f7-9b1cb01c176d
காளை மாடு. - படம்: ஊடகம்

அரசர் ஒருவர் நல்ல திறமையான அமைச்சரைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார். அந்தப் போட்டி என்னவென்றால், “அவர் வளர்க்கும் மூன்று காளை மாடுகளை அவர் அவிழ்த்துவிடுவார். அதில் ஏதாவது ஒரு காளையின் வாலைப் பிடிக்கவேண்டும். அப்படிப் பிடித்துவிட்டால் அவர்தான் நாட்டின் தலைமை அமைச்சர். அப்படிப் பிடிக்காதவர்கள் சிறைக்குச் செல்லவேண்டும்,” என்று அறிவித்தார். அதைக் கேட்ட மக்கள், காளையைப் பிடிக்கப் போய் உயிரை விடவேண்டி இருக்கும் என்று பயந்துபோய் ஒதுங்கினர்.

சிம்பு என்று இளைஞன் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாகக் கூறி போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தன.

முதலில் ஒரு காளை சீறியபடி பாய்ந்து வந்தது. அதைப் பார்த்த சிம்பு பயந்துபோய் அடுத்த மாட்டின் வாலைப் பிடிக்கலாம் என்று அந்தக் காளையை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கி நின்றான். அந்தக் காளையைத் தொழுவத்தில் அடைத்தனர்.

அடுத்த வந்த காளையோ நீண்ட கொம்புகளுடன் சீறிப் பாய்ந்து வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டது. அது எதிரில் இருப்பவர்களை தன்னுடைய கூர்மையான கொம்பால் முட்ட வேகமாக சீறிப் பாய்ந்து வந்தது. அதையும் பிடிக்காமல் சிம்பு மூன்றாவது காளையைப் பிடிக்கலாம் என்று நின்றுவிட்டான்.

மூன்றாவது முறையாக கதவு திறக்க அப்போது வெளியே வந்த காளையைப் பார்த்த சிம்புவின் முகத்தில் புன்சிரிப்பு வந்தது. அவன் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான காளை மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தது. இந்த மாட்டை விடக்கூடாது. இதைக் கட்டாயம் பிடித்தே ஆகவேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொடத் தயாராக நின்றான் சிம்பு.

காளை அருகில் வந்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். காரணம் அந்த மாட்டுக்கு வாலே இல்லை. நல்ல வாய்ப்புகளை தவற விட்டோமே என்ற வருத்தத்தில் தன் அறியாமையை எண்ணி வருந்தி, சிறைக்குச் சென்றான் சிம்பு.

நீதி: மாணவர்களே! நமது வாழ்க்கையும் இப்படித்தான். பல வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று வரும் வாய்ப்புகளை நழுவவிட்டால், கதையில் வரும் சிம்புவைப்போல வருந்த வேண்டி இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.

குறிப்புச் சொற்கள்