அடுக்குமாடிக் குடியிருப்பில் கவின் வசித்து வந்தான். அவனுக்குப் பந்து விளையாடுவது என்றால் கொள்ளை ஆசை. பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பந்து விளையாட அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்திற்குச் சென்றான். கீழ்த்தளத்தில் ‘பந்து விளையாடத் தடை’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் பந்தை எட்டி உதைத்து விளையாடத் தொடங்கினான் கவின்.
திடீரென்று அவன் பந்தை ஓங்கி உதைக்க, அது உயரே இருந்த ஒரு கண்காணிப்புப் படக்கருவியின் (CCTV) மீது பலமாகப் பட்டது. “டக்!” என்ற சத்தத்துடன் படக்கருவி கீழே விழுந்து உடைந்தது. கவின் அதைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான். அவனது இதயம் வேகமாகத் துடித்தது. பயத்தில் கவின் பந்தை எடுத்துக்கொண்டு மின்தூக்கி மூலம் தன் வீட்டிற்கு ஓடினான்.
‘யாராவது என்னைப் பார்த்திருப்பார்களோ? காவல் அதிகாரி தண்டிப்பாரோ?’ என்று எண்ணி அவன் அஞ்சினான். அப்போது அவனுக்கு ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்று ஆசிரியர் நடத்திய உலகநீதி வரி நினைவுக்கு வந்தது. தவறு செய்ததை மறைப்பது அதைவிடப் பெரிய தவறு என்று அவன் உணர்ந்தான்.
கவின் பயத்தை விட நேர்மையே முக்கியம் என்ற முடிவுக்கு வந்து, அருகில் இருக்கும் நகர மன்றத்திற்குச் சென்றான். அங்கு கண்ணன் என்ற அதிகாரி வேலையில் இருந்தார். கவின் தயங்கியபடி அவர் முன்னால் சென்று “ஐயா, நான் ஒரு தவறு செய்துவிட்டேன் என்று நடந்ததைக் கூறி, அதற்கான நஷ்டத்தை தன் பெற்றோரிடம் கேட்டு வாங்கித் தருவதாகவும் கூறினான்.
அதிகாரி கண்ணன் கவினின் நேர்மையைக் கண்டு நெகிழ்ந்தார். அவர், “தம்பி, உன் நேர்மையை நான் பாராட்டுகிறேன். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது தவறுதான். ஆனால், பயத்தில் மறைக்காமல் உண்மையை ஒப்புக்கொண்டாயே, அது மிகச் சிறந்த குணம். இந்த முறை நான் உன்னை எச்சரிக்கையுடன் மன்னிக்கிறேன். ஆனால் இனிமேல் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று கூறி அனுப்பி வைத்தார்.
நீதி: “உடைந்த கண்காணிப்புப் படக்கருவியை பணத்தால் சரிசெய்துவிடலாம். ஆனால், ஒருமுறை பொய் சொல்லித் தப்பித்தால், நம் மீதான நம்பிக்கை எனும் கண்ணாடி உடைந்துவிடும். அதை மீண்டும் ஒட்ட வைப்பது கடினம். எனவே, தண்டனைக்குப் பயந்து பொய்யைத் தேடுவதை விட, மன்னிப்பைப் பெற உண்மையைச் சொல்வதே சிறந்தது. உலகநீதி கூறுவதுபோல, நம் மனத்திற்குத் தெரிந்து பொய் சொல்லக்கூடாது. பொய் சொல்லித் தப்பிப்பவன், அந்த நேரத்திற்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், உண்மை பேசுகிறவன் தலைநிமிர்ந்து வாழ்வான். நம் மனசாட்சியே உலகின் மிகப்பெரிய கண்காணிப்புப் படக்கருவி. அது நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.
மேலும் ஒரு நல்ல மாணவன் என்பவன் கல்வி கற்பவன் மட்டுமல்ல; அவன் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் இருக்க வேண்டும். பொதுச் சொத்திற்குத் தீங்கு நேரும்போது, அதை மறைக்காமல் பொறுப்பேற்றுக் கொள்வதுதான் உண்மையான வீரமும் நேர்மையும் ஆகும். கவினைப் போல நாமும் தவறு நேரும்போது ‘நெஞ்சாரப் பொய் சொல்லாமல்’ உண்மையை உரைப்போம்.”

