மனிதரால் போக முடியாத இடத்திற்குச் சென்ற நாய்

2 mins read
dc31a132-98f0-4680-b0c6-c2acb1f48cf8
கிஸா பிரமிடின் உச்சியில் சுற்றித் திரிந்த நாய். அதனைப் படம்பிடித்த அலெக்ஸ் லாங்கால். - படம்: அலெக்ஸ் லாங்கால்

உலகின் வரலாற்று சிறப்புமிக்க ஏழு அதிசயங்கள் என்ற பட்டியலில் சீனப் பெருஞ்சுவர், தாஜ்மஹால் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உலக அளவில் ஏழு அதிசயங்களை எடுத்துக் கொண்டாலும் மற்றொரு பக்கம் பழங்காலம் தொட்டே பலரையும் அதிசயிக்க வைக்கும் வகைகளில் பல வரலாற்று இடங்களும் உள்ளன.

அந்த வகையில் மிக முக்கியமான ஓர் இடம்தான் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள். எகிப்து என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடுகள்தான். அங்குள்ள பல பிரமிடுகள், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகின்றன. இவை, 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.

அந்த பிரமிடுகளின் புகைப்படங்களைப் பார்க்கும்போது எந்தவித தொழில் நுட்பமும் இல்லாமல் எவ்வாறு இப்படி கணக்கெடுத்தாற்போல முக்கோண வடிவில் பிரமிடுகளை கட்டியிருப்பார்கள் என்று இன்றும் அவற்றின் கட்டுமானம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

எகிப்தின் 118 பிரமிடுகளில் மிகப்பெரியது, கிஸாவின் கிரேட் பிரமிடு. இந்தப் பிரமிடுகளில் ஏறுவதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் மனிதர்கள் பிரமிடின் உச்சியைப் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால், இத்தகைய பிரமிடுகளை ‘பாராகிளைடிங்’ மூலம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

அக்டோபர் 16ஆம் தேதியன்று பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், செல்ஃபி எடுத்தபடி பயணித்தபோது, பிரமிடின் உச்சியில் ஏதோ நகர்வதுபோல் தெரியவே அதைக் காணொளியாக எடுத்துப் பார்த்திருக்கிறார்.

பிரமிடின் உச்சியில் நாய் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறார். உடன் அந்தக் காணொளியை தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட காணொளியை அன்று பிற்பகலுக்குள் சுமார் ஐந்து லட்சம் பேர் பார்த்து இருக்கின்றனர். ‘பறவைகளைத் துரத்திக்கொண்டு சென்ற நாய், பிரமிடின் உச்சியை அடைந்திருக்கும்’, ‘தரையில் இருந்து சுமார் 1,000 அடி இருக்கும் அந்த பிரமிடு உச்சியில் நாய் எப்படிச் சென்றிருக்கும்?’ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்