மாணவர்களே! இந்த வாரச் செய்திப் பகுதியில், இணையத்தில் அனைவரின் மனத்தையும் கொள்ளைகொண்ட ஒரு சுவாரசியமான குட்டி பஞ்ச்சைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
ஜப்பான் நாட்டில் உள்ள இச்சிகாவா நகர விலங்கியல் தோட்டத்தில் வாழ்கிறது பஞ்ச்-குன் (Punch-kun) என்ற பனிக்குரங்கு.
எங்கு சென்றாலும் ஓர் ஓராங்குத்தான் பொம்மையை இழுத்துக்கொண்டே செல்லும் இந்தக் குட்டிக் குரங்கைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வருகிறார்கள்.
தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அது பொம்மையைக் கூடவே வைத்துக்கொள்கிறது.
பஞ்ச்சுக்கு அம்மாவான பொம்மை
குட்டி பஞ்ச் பிறந்த சில நாள்களிலேயே அவனது அம்மா அவனை விட்டுச் சென்றுவிட்டார்.
அம்மா இல்லாததால் பஞ்ச் ரொம்ப பயந்துபோனது. கவலையோடு சோகமாக இருந்தது. அதைப் பார்த்த விலங்கியல் தோட்ட ஊழியர்களுக்கும் கவலை வந்தது. பஞ்ச்சுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அவர்கள் அவனுக்கு நிறைய பொம்மைகளை கொடுத்தனர். அதில் ஒரு பெரிய ஆரஞ்சு நிற ஓரங்குத்தான் (Orangutan) பொம்மையைப் பஞ்ச்சுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பஞ்ச் அதைத் தன் அம்மாவாக நினைத்துக்கொண்டான். அதைவிட்டுப் பிரியவே மாட்டான்.
தொடர்புடைய செய்திகள்
எங்கு போனாலும் அந்தப் பொம்மையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு செல்வான்.
தூங்கும்போது பொம்மை அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவான்.
அதனுடனேயே சாப்பிடுவான். அதனுடனேயே விளையாடுவான்.
குரங்குப் பள்ளிக்கூடம்
பஞ்ச் மற்ற குரங்குகளுடனும் பழகவேண்டும் என்பதற்காக அவனை மற்ற பெரிய குரங்குகளோடு விலங்கு பராமரிப்பாளர்கள் சேர்த்துவிட்டனர்.
தொடக்கத்தில் மற்ற குரங்குகளிடம் பழக அவனுக்குச் சற்று சிரமமாக இருந்தது. ஆனால், நாம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் பாடம் கற்றுக்கொள்வதுபோல, பெரிய குரங்குகளிடம் காட்டில் எப்படி வாழ வேண்டும் என்பதை பஞ்ச் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று வருகிறான்.
பஞ்ச்சை பார்க்கக் குவியும் கூட்டம்
ஆறு மாசமே ஆகும் பஞ்ச் தன் பொம்மையுடன் இருக்கும் காணொளிகள் இணையத்தில் பரவியதால், தற்பொழுது அவனை நேரில் பார்க்க விலங்கியல் தோட்டத்திற்கு தினமும் பெரிய கூட்டமே கூடுகிறது.
மிகவும் கூட்டம் கூடி சத்தம் போட்டால் பஞ்ச்சுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பயம் ஏற்படும் என்பதால், மக்கள் சற்று தள்ளியிருந்து பார்க்கும்படி பூங்கா அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
புதிய குடும்பம்:
தனியாக இருந்த குட்டிப் பஞ்ச் குரங்குக்கு இப்போது புதிய குடும்பம் கிடைத்துவிட்டது! பெரிய குரங்குகள் எல்லாம் பஞ்சை அன்பாகக் கட்டிப்பிடித்து, செல்லமாகக் கொஞ்சுகின்றன.
அன்பான அம்மா:
ஓர் அம்மா குரங்கு, பஞ்சைத் தன் சொந்தக் குழந்தை போலவே அரவணைத்துக் கொண்டது. இரண்டு பெரிய குரங்குகள் பஞ்சுக்குப் பாதுகாப்பாக நிற்கின்றன.
தைரியமான பஞ்ச்:
இதனால் குட்டிப் பஞ்சுக்கு நிறைய தைரியம் வந்துவிட்டது. தான் வைத்திருந்த பொம்மையைக் கட்டிப்பிடிப்பதை விட்டுவிட்டு, இப்போது மற்ற குரங்குகளுடன் ஜாலியாக ஓடி ஆடி விளையாடுகிறது.
விலங்குகளுக்கும் நம்மைப் போலவே அன்பும் பாசமும் இருக்கிறது என்பதற்கு நம்ம பஞ்ச் குரங்கு ஒரு அழகான உதாரணம்!
உங்களுக்கும் இதுபோல நண்பர்கள் இருக்கிறார்களா?
மாணவர்களே! பஞ்ச் குரங்குக்கு எப்படி ஒரு செல்லப் பொம்மை இருந்ததோ, அதேபோல உங்களுக்கும் மிகவும் பிடித்த பொம்மையோ அல்லது செல்லப் பிராணியோ (நாய், பூனை, கிளி) இருக்கிறதா?
அவற்றுடன் நீங்கள் விளையாடிய சுவாரசியமான அனுபவங்களை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதி, ஒரு அழகான புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்புங்கள்!
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tmstudent@sph.com.sg
நீங்கள் அனுப்பும் சிறந்த கதைகள் மற்றவர்களும் படித்து மகிழும்படி நாங்களே மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். உங்கள் கதையைச் சொல்ல நீங்கள் தயாரா?

