ஒருநாள் கவின் தன் தந்தையோடு பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தான். அப்போது ஓர் ஒதுக்குப்புறத்தில் சில சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள். அவர்களின் நடை, உடை சரியில்லாததால் கவினின் தந்தை, “எப்போதும் நல்ல நண்பர்களோடு சேர வேண்டும். அங்கு கூடியிருக்கும் அந்த சிறுவர்களுடன் சேராதே,” என்று அறிவுரை கூறினார்.
மறுநாள் கவின் தன் தந்தைக்காக காத்திருக்காமல் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கினான். அப்போது எப்போதும்போல சிறுவர்கள் கூட்டம் ஓரமாக அமர்ந்து எதையோ செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒளிந்து ஒளிந்து அமர்ந்து இருப்பதைப் பார்த்தால் ஏதோ தவறான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதுபோல் கவினுக்குத் தோன்றியது.
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து விக்ரம் என்ற சிறுவன் கவினை நோக்கி வந்தான். அருகில் வந்ததும், “சிறுவனே! உன்னை வெகு நாள்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடன் வா. நாங்கள் புதுவிதமான விளையாட்டைக் காட்டுகிறோம்,” என்று அழைத்தான். அப்போது கவின் தன் தந்தை சொன்னதை மறந்து விக்ரமுடன் சென்றான்.
“சிறுவனே! அந்த மரத்தில் பார்! ஒரு பெரிய தேன் கூடு இருக்கிறது. நான் அதன்மீது கல்லை வீசி கீழே விழ வைக்கப்போகிறேன். கீழே விழுந்ததும் உனக்கும் தேன் தருகிறேன்,” என்று கூறினான் விக்ரம். “தேன் கூட்டைக் கலைத்தால் தேனீக்கள் நம்மைக் கடித்துவிடும். அதனால் வேண்டாம்,” என்று பயத்துடன் கூறினான் கவின்.
ஆனால், அதனைக்க் காதில் வாங்கிக்கொள்ளாத விக்ரம், ஒரு கல்லை குறிபார்த்து வீசினான். தேன்கூடு கீழே விழுந்தது. அதைப் பார்த்த கவின், இப்போது என்ன நடக்குமோ என பயந்தான். கூட்டை நோக்கி வந்த தேனீக்கள் கூடு கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து கோபம் கொண்டன. அவை சிறுவர்களைத் துரத்தத் தொடங்கின. கவின் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உறைந்து போனான்.
ஆனால், விக்ரமோ கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து வேகமாக ஓடிப் போனான். ஆனால், பயத்துடன் நின்ற கவின் தன் நிலையை உணர்ந்து ஓடத் தொடங்கினான். ஆனால், கோபம்கொண்ட தேனீக்கள் விடுவதாக இல்லை. அவை வேகமாக வந்து கவினைக் கடிக்கத் தொடங்கின. வலியால் துடித்தான் கவின்.
கவினைத் தேடி வந்த அவனுடைய தந்தை தூரத்தில் கவின் கத்திக்கொண்டே ஓடி வருவதைப் பார்த்தார். அவர் கவினை ஓடிச்சென்று தூக்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். தேனீக்கள் கவினை பல இடங்களில் கடித்திருந்தன. தந்தை அவனது காயங்கள்மீது மருந்திட்டு ஆறுதல் கூறினார்.
அப்பா பொறுமையுடன், “இதுதான் உலகநீதி சொல்லும் பாடம் கவின். சேராத இடந்தனிலே சேர வேண்டாம். நாம் தவறான இடத்தில் சேர்ந்தால், அவர்கள் செய்யும் தவறுக்கு நாமும் தண்டனை அனுபவிக்க நேரிடும். இப்போது நீதான் கஷ்டப்படுகிறாய். நான் சொன்னதை நீ மறந்துவிட்டாய் கவின்,” என்றார். ‘சேராத இடந்தனிலே சேரவேண்டாம்,’ என்ற உலகநீதிப் பாடலை ஆசிரியர் பள்ளியில் சொல்லிக்கொடுத்ததையும் நான் மறந்தேனே என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் மட்டும் விளையாடத் தொடங்கினான். கவின் இப்போது ஒரு புத்திசாலிச் சிறுவன்!
தொடர்புடைய செய்திகள்
நீதி: தீயவர்கள் இருக்கும் இடத்திற்கோ, கூடாத இடங்களுக்கோ செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் நமக்குத் துன்பமே வரும்.

