தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவசரப்பட்டு ஆளை எடைப்போடாதே

3 mins read
0b1de919-1662-4c65-bf05-7d3cc6dc3a25
ஆற்றில் அடித்துச் செல்லப்படும் மரத்திடம் மன்னிப்புக் கேட்டது குருவி - படம்: செயற்கை நுண்ணறிவு

ஆற்றங்கரை ஓரமாக இரண்டு மரங்கள் இருந்தன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த சிட்டுக்குருவி ஒரு மரத்திடம், “மரமே! மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நான் உன் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு அதில் முட்டையிட்டு, என் குஞ்சுகளை வளர்க்கலாமா? அதற்கு அனுமதிப்பாயா,” என்று கேட்டது.

அதைக்கேட்ட முதல் மரம், “முடியாது” என்று கூறி மறுத்தது.

அதனால் சோகமடைந்த குருவி, அருகில் இருந்த மற்றொரு மரத்திடம் அதேக் கேள்வியைக் கேட்டது.

உடனே அந்த மரம், “சரி, நீ கட்டிக்கொள்,” என்று அனுமதி அளித்தது.

சிட்டுக்குருவியும் மகிழ்ச்சியுடன் அந்த மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. அந்தக் குருவி தன் மூன்று குஞ்சுகளுடன் அந்த கூட்டில் அமைதியாக வாழ்ந்து வந்தது.

இந்நிலையில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து நான்கு நாள்களாக பலத்த மழை பெய்ததால் ஆற்றின் கரையோரம் இருந்த முதல் மரம் வேரோடு கீழே சாய்ந்தது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

அதைப் பார்த்த குருவி, “எனக்கு வசிக்க இடம் தர மறுத்தாய். இப்போது பார் உன் நிலையை. ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறாய். உன் தீய எண்ணத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை,” என்று கூறி சிரித்தது.

அதைக் கேட்ட குருவி தங்கி இருந்த மரம், “குருவியே! நீ தவறாக நினைத்துவிட்டாய். அந்த மரத்தின் வேர்கள் பலம் இழந்துவிட்டது. அதனால் வெகு நாள்களுக்கு நிலையாக இருக்க முடியாது என்று அதற்கு நன்கு தெரியும். நீயும் உன் குஞ்சுகளும் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த மரம் அவ்வாறு சொன்னது. இல்லையென்றால் பறக்க முடியாத குஞ்சுகளுடன் உன் கூடு அந்த ஆற்றில் அந்த மரத்தோடு அடித்துச் செல்லப்பட்டு இருக்கும். நான் உறுதியாக இருந்ததால்தான் உனக்கு அனுமதி கொடுத்தேன். ஒருவரின் நல்ல மனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் தவறாக நினைக்கக்கூடாது,” என்றது.

அதைக்கேட்ட அந்தக் குருவி வெட்கித் தலைகுனிந்தது. அது உடனே பறந்து சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்படும் மரத்திடம் சென்று மன்னிப்புக் கேட்டது.

அவசரப்பட்டு யாரையும் எடைபோடாதீர்கள்!

குருவியைப் போல் இருக்காதீர்கள்: முதல் மரம் முடியாது என்று சொன்னவுடன், அது கெட்ட மரம், சுயநலமானது என்று குருவி நினைத்தது. ஆனால், அதன் உள்ளே இருந்த நல்ல எண்ணம் அதற்குத் தெரியவில்லை.

நாமும் அப்படித்தான்: சில சமயங்களில் பெற்றோர், நமக்கு ஒரு பொருளை வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு நம்மேல் அன்பு இல்லை என்று நினைக்கக்கூடாது.

2. உள்ளே இருக்கும் நல்ல எண்ணத்தைப் பார்க்கவேண்டும்

உண்மையில், முதல் மரத்திற்குத் தன் வேர் பலம் இல்லாமல் இருக்கிறது, நாம் குருவியைக் காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததால்தான் மறுத்தது. மற்றவர்கள் சிரமப்படக்கூடாது என்ற தியாகம்தான் அந்த மறுப்புக்குப் பின்னால் இருந்தது.

எனவே, ஒரு நண்பன் ஒரு விஷயத்தை மறுத்தால் அல்லது ஆசிரியர் உங்களைக் கடிந்து கொண்டால், அதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்கள் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்!

நீதி: “யாராவது உங்களுக்கு மறுப்புச் சொன்னால், உடனே கோபப்படாமல், அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையான பாசம் பெரும்பாலும் வார்த்தைகளில் இல்லாமல், அவர்களின் செயல்களின் பின்னால் மறைந்திருக்கும்.”

குறிப்புச் சொற்கள்