தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழுகின் விடாமுயற்சி - நமக்கு ஒரு பாடம்

3 mins read
f2c3b0ae-e83f-4bb9-ab24-bfbddc24a6c2
மேகங்களுக்கு மேல் பறக்கும் கழுகு. - செயற்கை நுண்ணறிவு

அடர்ந்த அந்தக் காட்டில் பல பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு நாளும் அவை தங்கள் கூடுகளைவிட்டு வெளியே வந்து, தங்கள் இரையைத் தேடிச் செல்லும்.

அப்படி ஒரு நாள், அவை இரை தேடி அலைந்து கொண்டிருந்தபோது, வானம் திடீரெனக் கருமையாக மாறியது. இடியும் மின்னலும் வெடித்தன. பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

சிறிய பறவைகள் எல்லாம் பயத்தில் நடுங்கி, அருகிலிருந்த மரங்களின் கிளைகளில் ஒதுங்கின. “இந்த மழையில் எப்படி இரை தேடுவது?” என்று அவை கவலையுடன் புலம்பின.

ஆனால், ஒரு பெரிய கழுகு மட்டும் அச்சப்படாமல், தனது உறுதியான இறக்கைகளை விரித்து, மழை மேகங்களுக்கு மேலாகப் பறக்கத் தொடங்கியது.

இடியும் காற்றும் அதன் இறக்கைகளை அசைத்தபோதும், அது சளைக்கவில்லை. பல அடிகள் உயரத்திற்கு மேகங்களுக்கு மேல் பறந்து, மழை பெய்யாத இடம் தேடி அங்கு சென்று இரை தேடி உண்டபின் வெற்றிக் கர்வத்துடன் தன் கூட்டிற்குத் திரும்பும்.

கழுகு, மேகங்களுக்கு மேல் பறக்க அதன் தன்னம்பிக்கைக்குக் காரணம் அதன் விடாமுயற்சிதான். புயல்களைச் சந்திக்க அது நீண்ட நாள்கள் பயிற்சி செய்திருந்தது.

ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், அது மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயன்றது. அதன் உழைப்புதான், மழை மேகங்களுக்கு மேலே பறக்கும் வலிமையைக் கொடுத்தது.

இதைத்தான் அப்துல் கலாம் ஐயா, “கழுகைப்போல நாமும் நம் கனவை அடைவதற்கு தினமும் விடாமுயற்சியுடன் பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றி அடையவேண்டும்,” என்று கூறியிருக்கிறார். சவால்களைச் சந்திக்கப் பயப்படாமல், விடாமுயற்சியுடன் உழைத்தால், ‘வானம் தான் நமது எல்லை’ என்பதை உணரலாம்.

ரக்ஷணாஸ்ரீ, தொடக்கநிலை 5, பூச்சுன் தொடக்கப்பள்ளி

கழுகுகள் - ஒரு கண்ணோட்டம்

கழுகுகளின் நடத்தையையும் அவற்றின் திறன்களையும் வைத்துப் பார்க்கும்போது, அவை மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள் எனக் கூறலாம்.

கழுகுகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுகின்றன என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே:

கூர்மையான பார்வை: கழுகுகளுக்கு மனிதர்களைவிட 4 முதல் 8 மடங்கு கூர்மையான பார்வை உண்டு. ஒரு கழுகினால் 3.2 கி.மீ தொலைவில் உள்ள இரையைக்கூட தெளிவாகப் பார்க்க முடியும். இது அவற்றின் வேட்டைத் திறனுக்கு மிகவும் அவசியம்.

திட்டமிட்ட வேட்டை: கழுகுகள் சாதாரணமாக பறந்து வேட்டையாடுவதில்லை. அவை உயரமான இடங்களில் இருந்து இரையைக் கண்காணித்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து தாக்கும்.

வாழ்வியல் உத்தி: கழுகுகள் மழை, புயல் போன்ற கடினமான சூழ்நிலைகளில் கூட தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கண்டறியும் திறன் கொண்டவை. உதாரணமாக, அவை புயலைக் கண்டு அஞ்சாமல், அதன் சிறகுகளைப் பயன்படுத்தி உயரப் பறக்கின்றன.

கூடு கட்டும் நுட்பம்: கழுகுகள் மற்ற உயிரினங்களால் எளிதில் அணுக முடியாத மலைப் பாறைகள் அல்லது உயரமான மரங்களில் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. இது அவற்றின் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான செயல்.

மொத்தத்தில், மனிதர்களின் அறிவுத்திறனைப் போல கழுகுகளுக்கு ஆறு அறிவு உண்டு என்று கூற முடியாது. ஆனால், அவற்றின் தனித்துவமான வாழ்வியல் உத்திகள், கூர்மையான பார்வை, தந்திரமான வேட்டை முறைகள் ஆகியவை கழுகுகளைப் பறவை இனத்திலேயே மிகவும் புத்திசாலித்தனமான ஓர் உயிரினமாக ஆக்குகின்றன.

குறிப்புச் சொற்கள்