தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யானையும் சிறு எறும்பும்

2 mins read
19981d3f-e0ca-4810-936a-3ab2e6e154e7
எறும்பின்மேல் தண்ணீரைத் தெளிக்கும் யானை. - படம்: செயற்கை நுண்ணறிவு

ஒரு பெரிய காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது.

அது எப்போதும் தனது வலிமை குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும்.

“நான்தான் பெரிய உடல் கொண்டவன். அதனால் நான்தான் இங்கு பெரியவன். இந்தக் காட்டு விலங்குகளுக்கு எல்லாம் அரசன். எல்லோரும் என்னைப் பார்த்தால் பயப்பட வேண்டும், இங்குள்ள எவரும் எனக்குச் சமம் இல்லை, யாராலும் என்னை அசைக்க முடியாது!” என்று நினைத்தது.

ஒருநாள் அது ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றது.

அப்போது ஒரு சிறிய எறும்பு அங்கே வந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்த யானை “ஹா ஹா!” என்று சிரித்தது.

சின்னஞ்சிறு உயிர் ஆன நீ ஏன் இந்தப் பக்கம் வந்துள்ளாய்? உனக்குக் கூடவா தண்ணீர் தாகம் எடுக்கிறது? என்று கேட்டுக்கொண்டே, தன் பெரிய தும்பிக்கையால் தண்ணீரை அள்ளி எறும்பின் மீது கொட்டியது யானை.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத எறும்பு, திக்கு முக்காடிப் போனது. மெல்ல மெல்ல தண்ணீரிலிருந்து மீண்டு வந்து, சற்றுக் கோபமாகப் பேசியது.

“யானையே! நீ பெரியவனாக இருந்தாலும், மற்றவர்களைத் துன்பப்படுத்தக்கூடாது. ஒருநாள் உனக்கும் உதவி தேவைப்படும் என்பதை மறக்காதே!” என்று எச்சரித்தது.

யானை ‘ஐய்யோ, ஐய்யோ...’ என்று சிரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது.

கோப மனநிலையில் இருந்த எறும்பு தன் தாத்தாவிடம் நடந்ததைச் சொன்னது. அதற்கு அதன் தாத்தா ‘ரௌத்திரம் பழகு’ என்று கூறினார்.

“அப்படி என்றால் என்ன?” என்று எறும்பு கேட்டது.

கோபப்பட வேண்டிய விசயத்துக்கு எல்லாம் சகித்துக்கொண்டு செல்லக்கூடாது என்று தாத்தா அறிவுரை கூறினார்.

உடனே அந்தச் சின்ன எறும்பு யானை இருக்கும் இடம் நோக்கிச் சென்றது. அங்கே யானை படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தது.

மெல்ல அதன் காதுக்குள் சென்ற எறும்பு மெதுவாகக் கடிக்க ஆரம்பித்தது.

தூக்கம் கலைந்த யானை, “யார் என்னைக் கடிப்பது? வலி தாங்க முடியவில்லையே. யாராவது எனக்கு உதவுங்கள்!” என உதவி கேட்டுப் பிளிறியது.

“என்னைச் சிறிய உயிர் என்று ஏளனமாக நினைத்துத்தானே என்மீது நீ தண்ணீரை ஊற்றி விளையாடினாய்? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லி திரும்பத் திரும்பக் கடித்தது எறும்பு.

“நான் செய்தது தவறுதான், தயவு செய்து என்னை மன்னித்துவிடு”. இனிமேல் என்னால் உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது,” என்று சொன்னது யானை.

நீதி: குழந்தைகளான நாம் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. அதேநேரத்தில், யாரையும் பார்த்து பயப்படவும் கூடாது. பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களை மதிக்க வேண்டும். எல்லோரும் பயனுள்ளவர்கள்தான். எவரையும் சிறுமைப்படுத்தக்கூடாது.

குறிப்புச் சொற்கள்