கல்வி, லட்சியத்தை ஒருசேரப் பின்தொடரும் இளம் வாள்சண்டை வீராங்கனை

3 mins read
44a47d7d-96e3-4fe2-b19c-67c9dea71fca
வாள் சண்டையில் சிகரங்கள் தொட விரும்பும் டன்யஸ்ரீ சிவராமன், 13. - படம்: டன்யஸ்ரீ

13 வயதிலேயே டன்யஸ்ரீ சிவராமன் விளையாட்டிலும் கல்வியிலும் சிறந்தவராகத் திகழ்கிறார்.

இவர், ஆறு வயதிலிருந்து வாள் சண்டை (Fencing) பயிற்சிபெற்று வருகிறார். மின்னல் வேகமும் உறுதியான மனப்பாங்கும் அவருக்கு ‘பிளேட் கிளப்’பில் (Blade Club) ‘ஃபிளாஷ் மிஷின்’ (Flash Machine) எனும் புனைப்பெயரைப் பெற்றுத்தந்தன.

தந்தையின் கனவை நனவாக்கிய மகள்

டன்யஸ்ரீ ரத்தத்திலேயே வாள் சண்டை நாட்டம் ஊறியுள்ளது.

“என்னை வாள் சண்டைக்கு அறிமுகப்படுத்தியது என் அப்பா. 90களில் அவர் அதைப் பயில விரும்பினார். ஆனால், அந்த வீர விளையாட்டைக் கற்பதற்கு அதிகமாகச் செலவாகும் என்பதால் அவரால் பயில முடியவில்லை,” எனப் பகிர்ந்தார் டன்யஸ்ரீ.

தந்தையின் நிறைவேறாத கனவு, இன்று டன்யஸ்ரீயின் சாதனையாக மாறியுள்ளது.

‘மாடர்ன் ஃபென்சிங்’கில் தொடங்கி, ‘பிளேட் கிளப்’பில் தன் திறன்களை மேம்படுத்திய அவர், கடந்த ஏழு ஆண்டுகளில் விளையாட்டின் நுட்பங்களைப் புரிந்துகொண்டுள்ளார். அதற்குத் தேவையான மனக் கட்டுப்பாட்டையும் வளர்த்துக்கொண்டார்.

வெற்றி தோல்வியில் பாடங்கள்

வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியில் மயங்காமல், தோல்வியில் துவண்டு விடாமல் அவற்றிலிருந்து பாடம் கற்று வருகிறார் டன்யஸ்ரீ.

வெற்றி மகிழ்ச்சியாகத்தான் இருக்கும், ஆனால் தோல்வி மூலம்தான் மீள்திறன் வளரும் என்றார் அவர்.

“யாராவது என்னை வெல்ல வேண்டுமென்றால், அதற்காக அவர்கள் போராட வேண்டும். நான் அவர்களின் வெற்றிக்கான பாதையை எளிதாக்க மாட்டேன்!” என்று உறுதியாகக் கூறுகிறார் டன்யஸ்ரீ.

இந்த மனப்பாங்கே, தொடர்ந்து திறன்களை மேம்படுத்த அவருக்கு உந்துதலளிக்கிறது.

கல்வியும் விளையாட்டும் இரு கண்கள்

தான் படிக்கும் ஈசூன் உயர்நிலைப் பள்ளியில் வாள் சண்டை இணைப்பாடமாக இல்லாவிட்டாலும், டன்யஸ்ரீ ரோபோட்டிக்ஸ், கணினி நிரலாக்கத் துறைகளில் தன் நாட்டத்தை வளர்த்துவருகிறார். தன் பள்ளிக்கே வாள் சண்டை தொண்டூழியப் பயிற்றுவிப்பாளராக அவர் திரும்ப விரும்புகிறார்.

“என்னைச் செதுக்கிய பள்ளிக்கு நான் கற்றுக்கொண்டதைத் திரும்பக் கொடுப்பது எனக்குப் பெருமையாக இருக்கும்,” என்றார் அவர்.

‘பிளேட் கிளப்’பின் ‘ஃபிளாஷ் மிஷின்’

‘ஃபிளாஷ் மிஷின்’ என அவருக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் அவரது திறமையைப் பறைசாற்றுகிறது. பல ஆண்டுகளாக ‘பிஸ்டல் கிரிப்’ (pistol grip) கொண்டு வாள் சண்டை செய்துவந்தபின், அவரது பயிற்சியாளர்கள் ‘பிரெஞ்ச் கிரிப்’ (French grip) முறைமைக்கு அவரை மாற்றினர். இது அவரது வேகமான, துல்லியமான பாணிக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தியது.

எதிர்காலம் நோக்கி…

வாள் சண்டை தமக்கு மிகவும் பிடித்திருந்தாலும், மருத்துவத் துறையில் சாதிக்க விரும்புகிறார் டன்யஸ்ரீ. பெற்றோரை முன்மாதிரியாகக் கொண்டு, எலும்பியல் (orthopaedics) அல்லது விளையாட்டு மருத்துவத்தில் (sports medicine) நிபுணராக விரும்புகிறார். “காயமுற்ற விளையாட்டு வீரர்கள் நலம்பெற்று மீண்டும் சிறக்க உதவியாக இருக்க விரும்புகிறேன்,” எனத் தனது விளையாட்டு ஆர்வத்துடன் சமூக நலனையும் இணைக்கிறார் டன்யஸ்ரீ.

ஊக்கமூட்டும் வார்த்தைகள்

“எந்த விளையாட்டைத் தேர்ந்தெடுத்தாலும் முழுமனத்துடன் ஈடுபடுங்கள். இது வெற்றிக் கிண்ணங்கள் பற்றியது மட்டுமன்று, வளர்ச்சி, குழுவுணர்வு, பொறுமை ஆகிய அனைத்தையும் சார்ந்தது. மேலும், உங்கள் சுற்றத்தினர் வழங்கும் ஆதரவு மிகவும் முக்கியம். பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் ஆகியோரே எனது வெற்றியின் அடித்தளம்,” என்றார் டன்யஸ்ரீ.

துணிவும் நன்றியுணர்வும் நிறைந்த எதிர்காலம்

வாள் சண்டை, ரோபோட்டிக்ஸ், கல்வி, இவற்றில் சமநிலையுடன் முன்னேறுகிறார் டன்யஸ்ரீ. அவர் ஒருநாள் சிங்கப்பூரை அனைத்துலக வாள் சண்டை மேடையில் பிரதிநிதித்தாலோ எதிர்கால மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திரும்பினாலோ, ஒன்று மட்டும் நிச்சயம்; அவரது பயணம் உறுதியும் நன்றியுணர்வும் நிறைந்ததாக, அவருடைய குடும்பத்தினர், வழிகாட்டிகளின் அசைக்கமுடியாத ஆதரவின் வெளிப்பாடாக அமையும்.

குறிப்புச் சொற்கள்