‘சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது’

‘சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது’

4 mins read
f6e733fe-b7b4-4f35-a04f-c34a2e1298e2
அருண் பதற்றப்படாமல், தன்னுடைய உடைந்த திட்ட மாதிரியைக் காண்பித்து நடுவர்களுக்கு திட்டம் எப்படிச் செயல்படும் என்று விளக்கினான். - படம்: செயற்கை நுண்ணறிவு

‘சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது’

என்ற தொடக்கநிலை 5க்கான பழமொழிக்கு ஏற்ற கதையும் அதற்கான வினாக்களும்

பிடோக் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான் அருண். அவன் படிப்பிலும் பள்ளியின் புறப்பாட நடவடிக்கைகளிலும் மிகவும் கெட்டிக்காரன். அனைவரிடமும் அன்பாகப் பழகுவான். யாருக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்வான்.

அவனுடன் படிக்கும் கார்த்திக்கு அருணைப் பார்த்தால் எப்போதுமே ஒரு பொறாமை.

அருண் எப்பொழுதும் ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெறுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால், கார்த்திக் அடிக்கடி அருணை வம்புக்கு இழுப்பான்; சில நேரங்களில் அவனது புத்தகங்களை மறைத்து வைப்பான்; மற்ற மாணவர்களிடம் அருணைப் பற்றிக் குறை கூறுவான். ஆனால், அருண் அவனிடம் ஒருபோதும் கோபப்பட மாட்டான். புன்னகையுடன் அமைதியாகக் கடந்து சென்றுவிடுவான்.

பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘அறிவியல் கண்காட்சி’ வந்தது. அருண் பல வாரங்களாகக் கஷ்டப்பட்டு சிங்கப்பூரின் ‘சுற்றுச்சூழல் நகர மாதிரி’ ஒன்றை உருவாக்கியிருந்தான்.

கண்காட்சி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன், பொறாமை கொண்ட கார்த்திக், அருணின் திட்ட மாதிரியின் மீது தெரியாமல் இடிப்பதுபோல நடித்து அதனைத் தள்ளிவிட்டு உடைத்தான்.

அருணுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனது பல நாள் உழைப்பு சுக்குநூறாக உடைந்துவிட்டது.

கார்த்திக் இப்போது அருண் கோபத்தில் தன்னிடம் சண்டை போடுவான், இதனால் கண்காட்சியில் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவான் என்று எதிர்பார்த்தான். ஆனால் அருண் ஆத்திரப்படவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு, அமைதியாக உடைந்த பாகங்களை முடிந்தவரை வேகமாக ஒன்று சேர்த்தான்.

சிறிது நேரத்தில் தலைமை ஆசிரியரும் நடுவர்களும் வந்தனர். உடைந்த மாதிரியைப் பார்த்தது குழப்பம் அடைந்தனர். ஆனால், அருண் பதற்றப்படாமல், தன்னுடைய திட்டம் எப்படிச் செயல்படும்; உடைந்த அந்தப் பாகங்கள் எதைக் குறிக்கின்றன, அந்தத் திட்டத்தால் சிங்கப்பூருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் விளக்கினான். அவனது விடாமுயற்சியையும் அறிவாற்றலையும் கண்டு நடுவர்கள் வியந்து பாராட்டினர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்குக்குத் தன் தவற்றை நினைத்து மிகவும் வெட்கமாக இருந்தது. அதோடு, அடுத்ததாகக் கார்த்திக் செய்திருந்த ‘ரோபோட்’ இயந்திரம் திடீரென வேலை செய்யாமல் நின்றபோது, அருண் கோபம் இல்லாமல் அவனிடம் சென்று அந்த ரோபோட்டைச் சரிசெய்து கொடுத்தான்.

கார்த்திக் அழுதுகொண்டே அருணிடம், “என்னை மன்னித்துவிடு அருண். நான் உனக்கு இவ்வளவு கெடுதல் செய்தும், நீ எனக்கு உதவி செய்கிறாயே!” என்றான்.

நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த வகுப்பாசிரியர் திரு. ரவி அவர்களை அருகில் அழைத்தார்.

“மாணவர்களே, இன்று அருண் நடந்துகொண்ட விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கார்த்திக் செய்த செயலால் அருணுக்குக் கோபமும் வருத்தமும் வந்திருக்கலாம். ஆனால், அவன் தன் பொறுமையையும், உதவும் குணத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை.

“‘சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது’ என்ற வரிகளுக்கு அருணே சிறந்த உதாரணம். எப்படித் தூய்மையான தங்கத்தை நெருப்பில் சுட்டாலும் அது தன் பளபளப்பை இழக்காதோ, அதுபோலத் தனக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், நல்லவர்கள் தங்கள் நற்குணங்களை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்,” என்று பாராட்டினார்.

அன்று முதல் கார்த்திக் தன் பொறாமையை விட்டுவிட்டு அருணுக்குச் சிறந்த நண்பனாக இருந்தான்.

1. வினாக்கள்

Q1. அருண் எப்படிப்பட்ட மாணவன்?

Q2. கார்த்திக் ஏன் அருணை அடிக்கடி வம்புக்கு இழுத்தான்?

2. வாக்கியம் அமைத்தல்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்திச் சொந்தமாக வாக்கியங்களை உருவாக்குக.

Q3. தயங்காமல்: _____________________________________________

Q4. பொறாமை : _______________________________________________________

Q5. விடாமுயற்சி: _______________________________________________________

3. காலம் அறிதல்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் எந்தக்காலத்தைச் சேர்ந்தவை (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) எனக் கண்டறிந்து எழுதுக.

Q6. அருண் பல வாரங்களாகக் கஷ்டப்பட்டு சுற்றுச்சூழல் நகர மாதிரியை உருவாக்கியிருந்தான். (_______________)

Q7. அருண் எப்பொழுதும் ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெறுகிறான்.

(_______________)

Q8. கார்த்திக் இனி தன் பொறாமையை விட்டுவிட்டு அருணுக்குச் சிறந்த நண்பனாக மாறுவான்

(_______________)

Q9. அருண் கோபப்படாமல் ரோபோட்டைச் சரிசெய்து கொடுத்தான்.

(_______________)

4. எதிர்சொற்களைக் கண்டறிதல்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு ஏற்ற எதிர்ச்சொற்களை எழுதுக.

Q10. நன்மை x

Q11. நண்பன் x

Q12. அன்பு x

Q13. கோபம் x

Q14. வேகமாக x

Q15. பாராட்டு x

Q15. அமைதி x

விடைகள்:

Q1. அருண் படிப்பிலும் பள்ளியின் புறப்பாட நடவடிக்கைகளிலும் கெட்டிக்காரன். அனைவரிடமும் அன்பாகப் பழகுவான்; யாருக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்வான்.

Q2. அருண் எப்பொழுதும் ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெறுவது கார்த்திக்குக்குப் பிடிக்கவில்லை. அருண் மீது கொண்ட பொறாமையினால் கார்த்திக் அவனை அடிக்கடி வம்புக்கு இழுத்தான்.

Q3. என் நண்பனுக்கு உதவி தேவைப்பட்டபோது, நான் தயங்காமல் உதவி செய்தேன்.

Q4. மற்றவர்கள் வாழ்வில் முன்னேறுவதைக் கண்டு நாம் ஒருபோதும் பொறாமை கொள்ளக்கூடாது.

Q5. தேர்வில் வெற்றி பெற விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.

Q6. இறந்தகாலம்

Q7. நிகழ்காலம்

Q8. எதிர்காலம்

Q9. நன்மை x தீமை

Q10. நண்பன் x பகைவன்

Q11. அன்பு x வெறுப்பு

Q12. கோபம் x பொறுமை

Q13. வேகமாக x மெதுவாக

Q14. பாராட்டு x இகழ்ச்சி

Q15.அமைதி x பதற்றம்

குறிப்புச் சொற்கள்