அனைத்துலக அளவில் கவனம் பெற்றுள்ள ‘உலக நீர் விளையாட்டுப் போட்டி’ சிங்கப்பூரில் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக நீர் விளையாட்டுப் போட்டி இந்த ஆண்டு 22வது முறையாக ரஷ்ய நகரமான கஸானில் நடைபெற இருந்தது. தற்பொழுது ரஷ்யா-உக்ரேன் நாடுகளில் போர் நடைபெறுவதால் இடம் மாற்றப்பட்டு சிங்கப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உலக வரலாற்றில் ‘உலக நீர் விளையாட்டுப் போட்டி’யை நடத்தும் முதல் தென்கிழக்காசிய நாடு சிங்கப்பூர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, உலக நீர் விளையாட்டுத் திருவிழாவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் பதக்கங்களை உருவாக்குவதில் PCF ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலகர்கள் ஈடுபட்டனர்.
பாலர் பள்ளி மாணவர்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிகளுடன் இணைந்து அலுமினிய கேன்களை சேகரிப்பதில் இறங்கி, 100,000 கேன்களை சேகரித்தனர்.
அதைக்கொண்டு சுமார் 5,000 பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ‘குப்பையிலிருந்து புதையல்’ என்ற கருப்பொருளில் மறுசுழற்சி முறையில் குப்பைக்குச் செல்லவேண்டிய கேன்கள் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கான பதக்கங்களாக உருமாறியுள்ளன.
இந்நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழலைப் பராமரிப்பது என்பது மறுசுழற்சி செய்வது மட்டுமல்ல கழிவுகளைக் குறைப்பதற்கும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் ஒரு வழி என்பதை பாலகர்கள் இளம் பருவத்திலேயே உணரும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போட்டிகள் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்திலும் செந்தோசாவிலும் நடைபெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றை முன்னிட்டு தேசிய விளையாட்டரங்கிற்கு வெளியே ரசிகர்களுக்காகப் பல நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.
https://gameonsg60.worldaquatics-singapore2025.com/ எனும் இணையத்தளதில் விளையாடி, புள்ளிகளைச் சேகரித்து பரிசுகளை வெல்லலாம்.
‘யாக்குல்ட்’ பானத்தின் வரலாறு பற்றிய புதிர்க் கேள்விகளுக்குப் பதில்களைச் சுவரில் கண்டறிந்து, பரிசுகள் வெல்லலாம்.
சிங்கப்பூரில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி, மறுசுழற்சி செய்வது எப்படி போன்ற விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுப் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை எழுதி வைக்கலாம். நீர் விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளையும் வெல்லலாம்.
காலாங் வேவ் மால் கடைத்தொகுதியின் முதல் மாடியிலும் பல நீச்சல் சார்ந்த விளையாட்டுச் சாவடிகளும் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை உள்ளன.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் ‘வாசா டிரெய்னர்’ (Vasa Trainer) எனும் நீச்சல் இயந்திரத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு போட்டியிடலாம்.
27 மீட்டர் உயரத்திலிருந்து நீரில் குதிப்பதை மெய்நிகர் உண்மைச் சாவடி மூலம் அனுபவிக்கலாம்.
வாட்டர்போலோ சுவரில் உங்கள் வேகத்தை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம்.
கலைவடிவிலான நீச்சல் மாயைப் புகைப்படச் சாவடியிலும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.