சிங்கப்பூரின் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர்’ (Rainforest Wild Adventure) என்ற பிரம்மாண்டமான புதிய வனவிலங்கு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்த மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் மேம்பாட்டுப் பணிகள், இப்பூங்காவின் இரண்டாம் கட்டத்தின் திறப்புடன் முழுமையடைந்துள்ளன. பூங்காவின் ‘வெஸ்ட்’ (West) பகுதி கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது ‘ஈஸ்ட்’ (East) பகுதியும் திறக்கப்பட்டு முழுப் பூங்காவும் நிறைவடைந்துள்ளது.
இது ஆசியாவிலேயே சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் விலங்கியல் பூங்கா ஆகும். இங்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆசியக் காடுகளுக்குள் உண்மையாகவே பயணம் செய்வது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்!
இந்தப் புதிய சாகசப் பூங்காவில் காணக்கூடிய சுவாரஸ்யமான விலங்குகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
விசித்திரமான ஒகாப்பி
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இது, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி ஆகிய இரண்டு விலங்குகளின் கலவை போல ஒரு விசித்திரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. தனது நீளமான நாக்கைப் பயன்படுத்தி மிக உயரத்தில் உள்ள மர இலைகளை இது எளிதா பறித்துச் சாப்பிடும். அழியும் தருவாயில் உள்ள இந்த அரிய விலங்கை தென்கிழக்கு ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் நீங்கள் பார்க்க முடியும்!
குட்டி நீர்யானை (Pygmy Hippo)
இவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. ஆனால் இவற்றின் தோலிலிருந்து இளஞ்சிவப்பு நிறத்தில் வியர்வை போல திரவம் சுரக்கும். இது இயற்கையான ‘சன்ஸ்கிரீன்’ (sunscreen) போலச் செயல்பட்டு, சூரிய வெப்பத்திலிருந்து இவற்றின் மிருதுவான தோலைப் பாதுகாக்கிறது.
அழகிய வரிகள் கொண்ட ஈஸ்டர்ன் போங்கோ (Eastern Bongo)
காடுகளில் வாழும் மான் வகைகளில் மிகவும் பெரிய, அதிக எடைகொண்ட விலங்கு இதுவாகும். தற்போது உலக அளவில் வெறும் 80க்கும் குறைவான ஈஸ்டர்ன் போங்கோக்களே காடுகளில் எஞ்சியுள்ளன என்பது ஒரு அதிர்ச்சியான தகவலாகும்.
துள்ளிக்குதிக்கும் லெமூர் (Lemur)
நீண்ட வால் கொண்ட லெமூர்கள் விளையாடுவதை இந்தப் பூங்காவில் பார்க்கலாம். இவை அதிகாலையில் சூரிய ஒளியில் வெப்பத்தைப் பெறுவதற்காக, தங்களது வெள்ளை நிற வயிறுப் பகுதி வெயிலில் படும்படி ‘பத்மாசனம்’ (lotus position) போன்ற ஒரு தனித்துவமான முறையில் அமர்ந்திருக்கும் சுவாரஸ்யமான பழக்கத்தைக் கொண்டுள்ளன. இங்குள்ள பாவோபாப் (baobab) மரங்களுக்கு இடையே இவை துள்ளிக்குதிப்பதை நீங்கள் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
நைல் லெச்வே (Nile Lechwe)
இவற்றில் ஆண், பெண் மான்களை நிறத்தை வைத்தே எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்! ஆண் மான்கள் கருப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், வளைந்த நீண்ட கொம்புகளுடனும் காணப்படும். பெண் மான்கள் கொம்புகள் இல்லாமல் தங்க நிறத்தில் இருக்கும். சேறு நிறைந்த இடங்களிலும் இவற்றின் கால்கள் சறுக்காமல் ஓடுவதற்கு ஏற்ப சிறப்பாக அமைந்திருக்கும்!
விலங்குகளை நேரில் கண்டு களிக்கவும், இயற்கையின் அழகைப் புதிய கோணத்தில் கற்றுக்கொள்ளவும், தவறாமல் வரும் விடுமுறை காலத்தில் உங்கள் குடும்பத்தினருடன் இந்த சாகச உலகிற்குச் சென்று மகிழுங்கள்!

