தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூடுபிடிக்கும் எஃப்1 கார் பந்தய விளையாட்டுகள்

2 mins read
4f45b29f-da37-4279-bce0-e0d5dfe71c86
‘மிண்ட்’ பொம்மை அரும்பொருளகத்தின் புதிய தற்காலிகக் கண்காட்சியில் விளையாடும் மைரா, 9 (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் முழுவதும் கார் பந்தய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எஃப்1 கிராண்ட் பிரி அக்டோபர் 3 முதல் 5ஆம் தேதிவரை சிங்கப்பூரில் மீண்டும் நடைபெறவுள்ளது.

அதற்கான ஆரவாரம் சூடுபிடிக்கும் வேளையில் புதிய பொம்மைக் கார் கண்காட்சி ‘மிண்ட்’ பொம்மை அரும்பொருளகத்தில் (MINT Museum of Toys) ஆகஸ்ட் 23 முதல் அக்டோபர் 5ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் ‘பாப்-அப் இன் தி மியூசியம்’ நிகழ்ச்சியில் இக்கண்காட்சி இடம்பெறுகிறது.

சிறுவர்கள் விரும்பி விளையாடும் கார் விளையாட்டுகளும் கண்காட்சியில் உள்ளன. குறிப்பாக, அரும்பொருளகத்துக்கு வெளியே வேறெங்கும் இன்னும் விற்பனையாகாத, மூன்று எஃப்1 கார் பந்தயத் தடங்கள் கொண்ட விளையாட்டை விளையாடிப் பார்க்கலாம்.

நெழிவுகள் கொண்ட விதவிதமான கார் பந்தயத் தடங்களில் கார்கள், புவியீர்ப்புச் சக்தியையும் (gravity) மிஞ்சி வேகமாகச் சென்று சாகசங்கள் புரிவதைக் கண்டு பரவசமடையாத சிறுவர்கள் இல்லை.

அவ்வாறு கார் பொம்மைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர் தாயாருடன் வந்திருந்த சகோதரர்கள் ய‌‌‌ஷா‌ஷ், 12, மைரா, 9. “நான் எஃப்1 போட்டியை நேரில் கண்டிராவிட்டாலும் எனக்கு எஃப்1 பற்றிச் சில வி‌‌ஷயங்கள் தெரியும். எஃப்1 ‘லெகோ’ கார்களுடன் நான் விளையாடியுள்ளேன்,” என்றார் ய‌‌‌ஷா‌ஷ்.

“இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய எஃப்1 கார் பந்தய விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தது,” என்றார் மைரா. “அவர்களின் தந்தையின் அலுவலகத்திலிருந்து எஃப்1 கார் பந்தயம் தெரியும். நாங்கள் தவறாமல் இந்த அரும்பொருளகத்தின் நடவடிக்கைகளுக்கு வருவோம்,” என்றார் அவர்களின் தாயார் ஜோதி நெகி ரவாட்.

மூன்று எஃப்1 கார்பந்தயத் தடங்கள் கொண்ட புதிய பொம்மையுடன் விளையாடும் சகோதரர்கள் ய‌‌‌ஷா‌ஷ், மைரா.
மூன்று எஃப்1 கார்பந்தயத் தடங்கள் கொண்ட புதிய பொம்மையுடன் விளையாடும் சகோதரர்கள் ய‌‌‌ஷா‌ஷ், மைரா. - படம்: ரவி சிங்காரம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட கார் பொம்மைகள் முதல் இன்றும் பிரபலம் வகிக்கும் கார் பொம்மைகள்வரை, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை ‘டைகாஸ்டிங்’ (diecasting) எனும் முறையில் உருவாக்கப்பட்டவை. அதாவது, உருகிய உலோகத்தையோ நெகிழியையோ கார் பொம்மைக்கான அச்சுக்குள் ஊற்றி உருவாக்குவது.

1980களில் சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட ‘மேண்டரின்’ கார் பொம்மைகளும் சிங்கப்பூருக்கென தயாரிக்கப்பட்ட முதல் ‘ஹாட் வீல்ஸ் கன்வென்‌‌ஷன்’ கார்பொம்மையும் காட்சிக்கு உள்ளன.

உலகம் முழுதும் பிரபலமான ‘மேட்டல்ஸ் ஹாட் வீல்ஸ்’, ‘மேச்பாக்ஸ்’ கார்களும் விற்பனைக்கு உள்ளன.

அரும்பொருளகத்துக்கான நுழைவுச்சீட்டிலேயே இக்கண்காட்சிக்கான நுழைவு அடங்குகிறது.

ஆசியாவில் பழமைவாய்ந்த பொம்மைகள் கொண்ட அரும்பொருளகங்களில் ஆகப் பெரியது ‘மிண்ட்’ அரும்பொருளகம்தான் என உங்களுக்குத் தெரியுமா? 54 நாடுகளிலிருந்து 1840கள் முதல் 1980கள் வரை உருவாக்கப்பட்ட 50,000 பழங்காலப் பொம்மைகளும் பொருள்களும் இதில் உள்ளன!

சிறுவர்களைக் கவரும் கார் விளையாட்டுகள்.
சிறுவர்களைக் கவரும் கார் விளையாட்டுகள். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்