தாயார் ரேச்சல் மெக்டேலினுடன் 12 வயது அலெக்சிஸ், ஒன்பது வயது அலெனா ஆகியோர், ஈஸ்தர் ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
புக்கிட் தீமாவில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்திற்குக் காலை வேளையில் சென்று இறைவனை வணங்கிய பிறகு இந்த இரண்டு பிள்ளைகள், தங்கள் தாத்தா, பாட்டியுடன் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிறிஸ்துவ சமயத்தின்படி, இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த திருநாளாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர் நீத்த தினமாகப் புனித வெள்ளி போற்றப்படுகிறது.
ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய 40 நாள்களும் தங்கள் குடும்பத்தினர் இறைவனை வேண்டிக்கொண்டு நல்ல சிந்தனைகளை வளர்க்க முயல்வதாக 39 வயது தாயார் திருவாட்டி ரேச்சல் தெரிவித்தார்.
“நான் இந்தக் காலகட்டத்தில் சைவ உணவு மட்டும் உண்பேன். உணவுக் கட்டுப்பாடு மட்டும் இந்த வழக்கத்தின் நோக்கமல்ல. சாம்பல் புதன் முதல் தொடங்கும் தவக்காலம், கோபத்தை விடுத்து நல்லவற்றைச் செய்வதற்காக உள்ளது,” என்று அவர் கூறினார்.
கோபம் வருவது இயற்கை என்றாலும் கூர்மையான வார்த்தைகளைப் பேசாமல் நாவைக் காப்பது மிகவும் முக்கியம் என இந்தத் தாயார் தம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார். “மன்னிப்பு என்ற பண்பை வலியுறுத்துவேன். இந்தப் பண்பை இயேசு கிறிஸ்து போதிப்பதோடு நின்றுவிடாமல் அதனை வாழ்ந்து காட்டினார், அதற்காகவும் உயிர் விட்டார்,” என்று அவர் கூறினார்.
புனித வெள்ளியன்று பிள்ளைகள் பாட்டி வீட்டில் எளிமையான சைவ உணவை உண்பர். ஆனால் ஈஸ்டர் ஞாயிறன்று, எல்லாரும் மகிழ்ச்சியுடன் விருந்துணவு சாப்பிட்டு மகிழ்வர். அத்துடன், பாட்டியிடமிருந்து அந்தப் பிள்ளைகள் அன்பளிப்புகளைப் பெறுவர்.
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு, தங்களுக்கு நிம்மதி தருவதற்கு இந்தத் திருநாள் வாய்ப்பு தருவதாக மகன் அலெக்சிஸ் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அண்ணனின் கருத்தை ஆமோதிக்கும் தங்கை அலெனா, “ஈஸ்டர் என்பது பரிவையும் அமைதியையும் பற்றியது; குடும்பத்தினருக்கு அன்பு காட்டுவது பற்றியது,” எனக் கூறினார்.
சிறார்கள் அனைவருமே இந்த நேரத்தின் அன்பு, அருள் ஆகியவற்றின் சிறப்பை உணரவேண்டும் என்பது இந்தக் குடும்பத்தினரின் பிரார்த்தனையாகும்.

